பிற்போடப்பட்ட ஆசிய விளையாட்டு விழாவை 2023 செப்டெம்பரில் நடத்த தீர்மானிக்கப்பட்டது

ஹாங்சூ 2022 ஆசிய விளையாட்டு விழா அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 8ஆம் திகதிவரை நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

19ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், சீனாவில் கொவிட் – 19 தொற்று நோய் வேகமாக பரவியதன் காரணமாக ஆசிய விளையாட்டு விழாவை பிற்போடுவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.

ஆசிய விளையாட்டு விழா பிற்போடப்படுவதாக கடந்த மே மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாத காலப்பகுதியில் ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கென செயலணி ஒன்றை ஆசிய ஒலிமபிக் குழு நிமியத்தது.

சீனாவின் தேசிய ஒலிம்பிக் குழு, ஹங்சூ ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு, ஏனைய முக்கிய பங்குதாரர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய செயலணி, சர்வதேச போட்டிகள் நடைபெறாத 2023 செப்டெம்பர் – அக்டோபர் காலப்பகுதியை பரிந்துரை செய்திருந்தது.

அதற்கு அமைய ஆசிய விளையாட்டு விழாவுக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆசிய விளையாட்டு விழா சீனாவில் நடைபெறவிருப்பது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் பெய்ஜிங்கில் 1990இலும் குவாங்சூவில் 2010இலும் ஆசிய விளையாட்டு விழா நடத்தப்பட்டிருந்தது.

அடுத்த வருடம் ஆசிய விளையாட்டு விழாவை நடத்த முடியும் என்பதை உறுதிப்படுத்திய ஹங்சூ ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு, சினாவின் தேசிய ஒலிம்பிக் குழு, சீன மாநில அரசுகளுக்கு ஆசிய ஒலிம்பிக் பேரவை நன்றிகளைத் தெரிவிக்கிறது’ என ஆசிய ஒலிம்பிக் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு விழா தொடர்பாக பொறுமைகாத்த தேசிய ஒலிம்பிக் குழுக்கள், சர்வதேச மற்றும் ஆசிய சம்மேளனங்கள் மற்றும் பங்குதார்களுக்கு ஆசிய ஒலிம்பிக் குழு பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறது’ என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான சகல விளையாட்டு அரங்குகளும் ஏனைய வசதிகளும் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தியாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்