பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோரின் திருமண விபரங்களை நீக்க நடவடிக்கை!

பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் இலங்கையர் என குறிப்பிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோர் திருமணமானவர்களா அல்லது திருமணமாகாதவர்களா என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் சிறுவர்கள், பாடசாலைகளில் சேர்க்கப்படும் போது மன உளைச்சலுக்கு ஆளாகிய சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் முறைமையிலான புதிய பிறப்புச் சான்றிதழ்களை பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே மேலும் கூறியுள்ளார்.

பிறப்பின் போது ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்களே பிற்காலத்தில் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 15 வயதை பூர்த்தி செய்த ஒருவருக்கு குறித்த 12 இலக்கங்களிலேயே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே சுட்டிக்காட்டினார்.

முகநூலில் நாம்