பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய இரகசிய கடிதம்

பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய இரகசிய கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது.

பிரித்தானிய மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை காலமானார். இதையடுத்து அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி எலிசபெத் எழுதிய இரகசிய கடிதம் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தக் கடிதம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், 

கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னி மக்களிடையே உரையாற்றும் வகையில் பிரித்தானியா  மகா ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அந்தக் கடிதம் சிட்னி நகரில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்கக் கூடிய அறையில் உள்ள கண்ணாடி பெட்டகத்தில் வைத்துப் பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 

இதனை 2085ஆம் ஆண்டுதான் பிரித்துப் படித்து, அதிலிருக்கும் ராணியின் தகவல் சிட்னி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை, மகாராணியின் மிக நெருங்கிய உதவியாளர்கள் கூட அறிந்திருக்க முடியாது. காரணம், மிகவும் இரகசியமான இடத்தில் அமர்ந்துதான் மகாராணி அந்தக் கடிதத்தை எழுதினார். 

அதில் ஒன்றுமட்டும் நிச்சயம், அந்த இரகசிய கடிதத்தை 2085ஆம் ஆண்டு வரை யாரும் பிரித்துப் படிக்கக் கூடாது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த தகவலாக உள்ளது.

சிட்னி மேயருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், முக்கிய குறிப்பு ஒன்று உள்ளதாம். அதில், வரும் 2085ஆம் ஆண்டு ஒரு நல்ல நாளை தேர்வு செய்து இந்த கடிதத்தைப் பிரிக்கலாம். இதில் இருக்கும் செய்தியை அன்றைய நாளில் எனது செய்தியாக சிட்னி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மகாராணி எலிசபெத் குறிப்பிட்டிருக்கிறாராம்.

இவ்வாறு குறிப்பிட்டு, அழகாக எலிசபெத் ஆர் என்று அவர் கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் இதுவரை அவுஸ்திரேலியாவுக்கு 16 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்