பிரிட்டன் பிரதமர் தேர்தல் கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு

பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர்.

அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தெரிவாகி உள்ளனர்.

இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தெரிவு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஆகஸ்டு 4 ஆம் திகதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.

கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது. இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதனால் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்