பிச்சைக்காரன் 2-ம் பாகம் உருவாகிறது!

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனான விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாத்துரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் போன்ற படங்கள் வந்துள்ளன. இதில் 2016-ல் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. நாயகியாக சட்னா டைட்டஸ் நடித்து இருந்தார். சசி இயக்கினார்.

இந்த படத்தின் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்துக்கான 2-ம் பாகத்தையும் எடுக்க உள்ளனர். இதற்கான கதையை விஜய் ஆண்டனியே எழுதி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறேன். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை. மேலும் ஊரடங்கில் புதிய எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தும் முறை மற்றும் சினிமா சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்று வருகிறேன். ஊரடங்கினால் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்தேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் நாம்