பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகளை உருவாக்கிய பிறகு தற்போது தனது 100-வது வயதில் தன் சொந்தக் காடுக்கு திரும்புகிறது.

கிராண்ட் டார்ட்டாய்ஸ் எனப்படும் நில ஆமை வகையைச் சேர்ந்த டீகோவின் பூர்வீகம் அமெரிக்க கண்டத்தில், ஈக்வடார் தீவில் உள்ள கோலபாகோஸ் தீவுகள்.

சாந்தா குரூஸ் தீவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திட்டத்துக்காக 1960களில் தேர்வு செய்யப்பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோவும் ஒன்று.

இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 2000 தரை ஆமைகள் உருவாக்கப்பட்டு அந்த இனம் அழிவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றியில் டீகோவின் அதீத பாலுணர்வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பாராட்டப்பட்டது.

டீகோ நூற்றுக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியது. சில கணக்குகளின்படி அந்த எண்ணிக்கை சுமார் 800.

இந்தத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டீகோ தமது பூர்வீகத் தீவான கோலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் எஸ்பனோலா தீவுக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று கேலபாகோஸ் தேசியப் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

எஸ்பனோலாவுக்கு தாங்கள் அனுப்பிய ஆமைகளில் பெரும்பாலானவைக்கு பங்களித்தது டீகோதான் என்று பூங்காவின் இயக்குநர் ஜோர்ஜ் காரியோன் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தமது இயற்கையான வாழ்விடத்துக்கு டீகோ திரும்புவதால் மகிழ்ச்சி நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பனோலாவில் டீகோவின் இனத்தில் இரண்டு ஆண் ஆமைகளும், 12 பெண் ஆமைகளும் மட்டுமே இருந்தன. Chelonoidis hoodensis என்ற அறிவியல் பெயர் கொண்ட ஆமை இனத்தை பாதுகாக்கும் பணியில் அப்போதுதான் டீகோ ஈடுபடுத்தப்பட்டது. சொந்த இடத்துக்கு திரும்புவதற்கு முன்பாக தற்போது டீகோ தனிமையில் உள்ளது.

தனித்துவமான காட்டுயிர்கள், தாவரங்கள் கொண்ட கேலபாகோஸ் தீவுகள் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டுத் தலம் ஆகும். அதன் பல்லுயிர் வளம் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள்.

முகநூலில் நாம்