
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதியால் உள்வாங்கப்பட்ட இடைச்சேர்க்கைகள் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் அந்த இடைச்சேர்க்கைகளை நீக்கி 19க்கு அப்பாற்பட்ட திருத்தங்களை மேற்கொண்ட 22 ஆம் திருத்தச்சட்ட மூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றேன். அத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து புதிய அரசியலமைப்பு தயாரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் அப்போது இருந்த ஜனாதிபதி அந்த திருத்தங்களுக்கு சில இடைச்சேர்க்கைகளை உள்வாங்கி இருந்தார்.
அந்த இடைச்சேர்க்கைகள் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மீண்டும் பலப்படுத்தப்படுவதாக பாரிய விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. என்றாலும் தற்போது அரசாங்கத்தின் நிலைமை பூரணமாக மாற்றமடைந்திருப்பதால், 22ஆம் திருத்த சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியால் உள்வாங்கப்பட்டிருந்த இடைச்சேர்க்கைகளை நீக்கி, 19ஆம் திருத்தச்சட்டத்தை மீண்டும் நிலைநாட்டி, அதில் இருக்கும் சில பலவீனங்களை நீக்கி, 19க்கு அப்பால் சென்ற அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பிக்க நான் அமைச்சரவைக்கு பிரேரணை ஒன்றை முன்வைத்தேன்.
அதன் பிரகாரம் குறித்த சட்ட மூலம் அமைச்சரவை காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டிருக்கி்ன்றது. அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர், அதனை வர்த்தமானி மூலம் பிரசுப்படுத்த இருக்கின்றோம். வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்து 7 தினங்கள் முடிவடைந்ததுடன் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
அத்துடன் இந்த 22 ஆம் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என சட்டமா அதிபரும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இதன் மூலம் பாராளுமன்றத்துக்குள்ளும் சிவில் அமைப்பினருக்கு மத்தியிலும் வாத பிரதி விவாதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியுமான முறைமையில் அரசியலமைப்பில் திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கின்றோம்.
மேலும் 22ஆம் திருத்தச்சட்டமூலம் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாட்டுக்கு பாெருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது.
அதற்காக சிவில் சமூகத்தில் இளைஞர் யுவதிகளின் ஆதரவை அதிகம் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் தனிநபர்களின் எதிர்பார்ப்பை விட நாட்டுக்கு மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமான அரசியலமைப்போன்றை தயாரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதேபோன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டமூலத்திலும் திருத்தங்களை மேற்கொண்டு, சட்டமூலமாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றேன்.
இந்த சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சட்டமூலம் தயாரிக்க உயர் நீதிமன்ற நீதியசர் தலைமையில் குழுவொன்றை நியமித்திருக்கின்றேன். இந்த சட்டமூலத்தையும் சமகாலத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன் என்றார்.