பாகிஸ்தான் 5 விக்கெட்களால் அபார வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு (05) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க பாகிஸ்தான் 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்ளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன் மூலம் முதல் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்வியை பாகிஸ்தான் நிவர்த்தி செய்துகொண்டது.

மொஹமத் ரிஸ்வான், அணித் தலைவர் பாபர் அஸாம்   ஆகிய இருவரும் வேகமாக ஓட்டங்களைக் குவித்து 3.4 ஓவர்களில் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பாபர் அஸாம் (14) ஆட்டமிழந்தார்.

மொஹமத் ரிஸ்வானுடன் 2ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த பக்கார் ஸமான் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து மொஹமத் ரிஸ்வானும் மொஹமத் நவாஸும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 41 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

பக்கார் ஸமான் 20 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது மொத்த எண்ணிக்கை 147 ஓட்டங்களாக இருக்கையில் மொஹமத் ரிஸ்வான் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் குஷதில் ஷா (14 ஆ.இ.), ஆசிப் அலி (16) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் அசிப் அலி ஆட்டமிழந்தார்.

ஆனால், அடுத்து களம் புகுந்த இப்திகார் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே வெற்றிக்கு தேவைப்பட்ட 2 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியை ஒரு பந்து மீதமிருக்க உறுதிசெய்தார்

இந்திய பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, விராத் கோஹ்லியின் இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஒவர்களில் 7 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

கே. எல். ராகுல், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சுமாரான அதிரடியை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

ரோஹித் ஷர்மா 16 பந்துகளில் 28 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 20 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் இந்தியாவின் விக்கெட்கள் சரிந்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் விராத் கோஹ்லி திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்து அணியை ஓரளவு பலப்படுத்தினார்.

44 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் யாதவ் (13), ரிஷாப் பன்ட் (14), தீப்பக் ஹூடா (16) ஆகியோர் எதிர்பார்த்தளவு துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்