
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது. கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார்.
தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இது குறித்து பாபர் அசாம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 2-3 நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. ஆனால் ஒரு தொழில்முறை வீரராக இது போன்ற சூழலை சந்தித்து தான் ஆக வேண்டும். எங்களது பணி களத்தில் முழு திறமையை காட்டுவது தான்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் தான் இப்போது எங்களது கவனம் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் விரும்பிய மாதிரி எங்களது ஆட்டம் அமையவில்லை. ஏனெனில் தவறுகள் செய்து விட்டோம். அதில் இருந்து மீண்டு இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்’ எனறார்.