பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்டில் சந்திமால், ஓஷதவின் அரைச் சதங்களின் உதவியுடன் 315 ஓட்டங்களை குவித்த இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால், ஓஷத பெர்னாண்டோ ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடரை சமப்படுத்த இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானித்தது.

அணித் தலைவர் திமுத் கருணாரட்னவும் ஓஷத பெர்னாண்டோவும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சற்று ஆக்ரோஷமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஓஷத பெர்னாண்டோ 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து களம் புகுந்த குசல் மெண்டிஸ் (3) விரைவாகவே ஆட்டமிழந்து சென்றார்.

மறுபுறத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த திமுத் கருணாரட்ன 40 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது தேவையில்லாமல் ரிவேர்ஸ் ஸ்வீப்  அடிக்க விளைந்து ஆட்டமிழந்தார்.

100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மூத்த வீரரும் முன்னாள் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸ் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 42 ஓட்டங்களைப் பெற்றார். அவர் 4ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் பெறுமதிமிக்க 75 ஓட்டங்களை பகிர்ந்தார்.

தொடர்ந்து சந்திமாலும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  137 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 9 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் அடித்திருந்தார்.

கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் சந்திமால் தொடர்ச்சியாக குவித்த 4ஆவது அரைச் சதம் இதுவாகும். தனஞ்சய டி சில்வாவும் நிரோஷன் திக்வெல்லவும் அணியை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன்  நிதானத்துடன் துடுப்பெடுத்தாட முயற்சித்தனர். ஆனால் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது நிரோஷன் திக்வெல்ல 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 42 ஓட்டங்களுடனும் அறிமுக வீரர் துனித் வெல்லாலகே 6 ஓட்;டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நவாஸ் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்