
கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான சரத்குமார், அமிதாஷ் பிரதான், கஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், வின்சென்ட் அசோகன், டி. சிவா மற்றும் பலர் நடிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவான பரம்பொருள் என்ற திரைப்படத்தின் விமர்சனம்
வீடுகளில் புகுந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வருகிறார் கதையின் நாயகர்களின் ஒருவரான அமிதாஷ். மறுபுறம் கதையின் நாயகர்களின் மற்றொருவரான சரத்குமார் – காவல்துறை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே.. தன் அதிகாரத்தை தவறான வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறார். இந்த இருவரின் இலக்கு பணமாக இருந்தாலும், நோக்கம் வேறாக இருக்கிறது.
அமிதாஷ் ஒரு நாள் சரத்குமார் வீட்டில் திருடுகிறார். அவரிடம் மாட்டிக் கொள்கிறார். தன் குடும்ப சூழலை விவரித்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காப்பாற்றும்படி அவர் கேட்க.. நான் சொல்வதை நீ கேட்டால்.. உன்னைக் காப்பாற்றுகிறேன் என்கிறார் சரத்குமார்.
இந்நிலையில் இவர்களின் கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான சிலை ஒன்று கிடைக்கிறது. பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என அறிந்து, அதனை விற்பதற்கு தயாராகிறார்கள். அவர்கள் அந்த சிலையை விற்றார்களா? இல்லையா? அவர்களின் திட்டம் ஈடேறியதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் பரபர திரில்லர் திரைக்கதை.
காவல்துறை அதிகாரியாக சரத்குமார் அசத்தலான நடிப்பை வழங்கி இருக்கிறார். நடிகர் அமிதாஷும் தன் பங்கிற்கு நேர்த்தியான நடிப்பை அளித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் கஷ்மிரா பர்தேசி சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் திரைக்கதையுடன் பயணிப்பதால் மனதில் பதிகிறார்.
படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு அதிகம். திரில்லிங்கான தருணங்களும் அதிகம். அதிலும் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் வைத்திருக்கும் டிவிஸ்ட்… சபாஷ் போட வைக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையில் லாஜிக் மீறல் இருந்தாலும், சுவாரசியமாக பயணிப்பதால் ரசிக்கத் தோன்றுகிறது.