
நடிகர் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவரது சகோதரர் சத்யநாராயணா பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா இன்று வந்திருந்தார். இதன் பின் ரஜினி ரசிகரின் இல்ல விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார். அப்போது, ஆளுநர் பதவி ரஜினிக்கு கிடைக்குமா என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு, “அது ஆண்டவன் முடிவு” என்று அவர் பதிலளித்துள்ளார்.