பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

தனது பயிற்சாளர் டானி வல்வேர்டை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ள பிளிஸ்கோவா, புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த சாச்சா பஜின், கடந்த 2018 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மற்றும் 2019 அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தனது புதிய பயிற்சியாளர் சாச்சா பஜின் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளர் ஆசுஸ் சிம்சிச்சுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, ‘டீம் பிளிஸ்கோவா 2021’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமெரிக்க பகிரங்க டென்னிசில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டிவரை முன்னேறிய பிளிஸ்கோவா, இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரிடம் சம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்.

அதற்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிளிஸ்கோவா, குறிப்பிடத்தக்க வகையில் சாதிக்கவில்லை. இந்த ஆண்டு நடந்த 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அவர் காலிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

இந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற அவர், அதன் பின்னர் ரோமில் இறுதி வரை முன்னேறினார். இந்நிலையில் அவர் தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்