பந்து வீச்சாளர்களின் அதிரடி – நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவிப்பு

வெல்லிங்டன் டெஸ்டில் வில்லியம்சன், கிராண்ட்ஹோம், ஜாமிசன், போல்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் வில்லியம்சன் 89 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர். 


இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கிராண்ட்ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர்.


இறுதியில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

முகநூலில் நாம்