
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாளை (22) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காலை 10 மணியளவில் சத்தியப் பிரமாணம் இடம்பெறும் என்றும் அறியமுடிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடந்த 9ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தையடுத்து, அந்த பதவி வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள நிலையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா விரைவில் பதவியேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகிறது.
தம்மிக பெரேராவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இன்று (21) தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.