
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள் மூலமும் பரவக்கூடும், என்பதால் கைத் தொடர்பு இல்லாத கொடுப்பனவுகளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு பல வகையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்நிலையிலே கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள் மூலமும் பரவி வருகின்றதாக வெளியாகியுள்ளது. அது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியிலே அந் நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மை வழியாக இருமல் மற்றும் தும்மல் இருந்தாலும், வைரஸ்கள் சில சந்தர்ப்பங்களில் நாணயங்கள் போன்ற கடினமான மேற்பரப்பில் பல நாட்கள் உயிர்வாழும்.
பணம் அடிக்கடி பல கை மாறிவருகின்றது. எல்லா வகையான பக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நாணயத்தாள்களின் மூலம் விரைவாக பரவக்கூடும்.எனவே பொதுமக்கள் நாணயத்தாள்களை கையாண்டபின் கைகளை சவர்க்க்காரம் அல்லது கிருமி நீக்கி மூலம் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தைத் தொடுவதைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் நாணயத்தாள்களின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு இறந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் உள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.