நேர்காணல் முருகேசு சந்திரகுமார் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர், சமத்துவக்கட்சி)

நாட்டிலும் தமிழ்ப்பிரதேசங்களிலும் நிலவுகின்ற சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாக சமத்துவக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவர்களுடன் உரையாடியபோது….

1.வடக்கில் இடம்பெற்று வருகின்ற  தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்ற நடவடிக்கைகள்  தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

முதலில் இதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் நடக்கிறது. குருந்தூர்மலை, கோணேஸ்வரம் எனத் தொடரும் இந்த மேலாதிக்க ஆக்கிரமிப்பை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். காரணம், இது மேலும் இனரீதியான முரண்பாட்டை அதிகரிக்கும். பதற்றத்தை உண்டாக்கும். அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான இடைவெளியை மேலும் விரிவடையச் செய்யும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறார்கள். இன, மத, சாதி, பால் ரீதியாக மேலாதிக்கம் செலுத்த முற்படுவோர் தமது தவறுகளைக் குறித்துச் சிந்திப்பதே இல்லை. அவர்களுக்கு அது குற்றவுணர்வாகத் தெரிவதும் இல்லை. உலக ஒழுங்குக்கும் கால வளர்ச்சிக்கும் எதிராகவே இவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். வரலாற்றை பின்னகர்த்தும் சக்திகள் இவர்களே. இதனால்தான் இந்தச் சிறிய நாடு மேலும் மேலும் அழிவையும் பின்னடைவையும் சந்திக்கிறது. இன்று உலகமே கைகொட்டிச் சிரிக்கின்ற அளவுக்கு இலங்கையின் நிலவரம் வந்துள்ளது. இதைக்குறித்து சிங்கள மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கின்றவர்களாக சிங்கள மக்களே பெரும்பாலும் உள்ளனர். என்பதால் அவர்களே தமது ஆட்சியாளர்களைக் குறித்துக் கவனமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆட்சியாளர்களுடைய தவறுகளை கண்டித்து, அவற்றை நிறுத்தவும் திருத்தவும் வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே அதிகமாக உண்டு.

ஆனால் இதில் அவர்களுடைய அக்கறை போதாது. இதனால் இலங்கை தவறுகளின் தேசமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுத்த நெருக்கடி முடிந்து இப்பொழுது பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நெருக்கடி மக்களுடைய வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமல்ல, நாட்டின் இறைமையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இப்பொழுது வெளிநாடுகளுடைய விதிகளுக்கும் ஐ.எம்.எவ் போன்றவற்றின் நிபந்தனைக்கும் கட்டுப்பட்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் கையேந்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் எங்கே உள்ளது சுயாதீனமும் இறைமையும் கௌரவமும்?

.

ஒரு சிறிய, வளமான, அழகான நாடு எப்படியெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று சற்று ஆழமாக யோசித்தீர்களாக இருந்தால் நம் தலைகள் தாழும். உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும். பல இனங்கள், பல்வேறு அடையாளங்களை உடையவர்களைக் கொண்ட நாடுகள் எல்லாம் புதிய உலகில் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கின்றன. நாமோ  பிச்சையெடுத்துக்கொண்டே இன ரீதியாக மோதுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மறுவளத்தில் தமிழ் மக்களுடையதும் தமிழ் அரசியற் கட்சிகளின் தவறான, பலவீனமான நிலைமையும் இதற்குக் காரணமாகும். அதிகாரத் தரப்புகள் எப்பொழுதும் இந்த மாதிரி முரண்பாட்டை உருவாக்குவதற்கான உபாயங்களை – நடவடிக்கைகளையே மேற்கொள்ளும். அதை முறியடிக்கக் கூடிய பொறிமுறையும் திறன் மிக்க நடவடிக்கையும் தமிழ்த் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மாதிரி வாலாட்டல்களுக்கு இடமே இருக்காது.

2. யுத்தம் நிறைவுற்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.  ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவில்  இலங்கை விடயம் பேசப்படுகிறது, தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தும் இதுவரை எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. எனவே ஜெனீவா தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத் தருமா?

ஜெனிவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடரைப்பற்றியே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதில் இலங்கையின் மனித உரிமைக்கடப்பாடுகளைப் பற்றிப் பேசும்போது சக்தி மிக்க நாடுகள் இரண்டு அணியாக பிரிந்து நிற்பதுண்டு.  ஒரு தரப்பு இலங்கையைக் கண்டிக்கும். மறு தரப்பு இலங்கையை ஆதரிக்கும். இதைத் தவிர, இன்னொரு தரப்புண்டு. அது மெல்ல நழுவி இதிலிருந்து விலகி நிற்கும். இதுதான் முன்னரும் நடந்தது. இப்பொழுதும் நடக்கிறது. இனியும் நடக்கப்போகிறது.

உண்மையில் இலங்கையில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி இந்த நாடுகள் அனைத்துக்கும் தெரியும். ஐ.நாவுக்கும் தெரியும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே ஒரு அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். இதுதான் சர்வதேச அரசியல். உலக ஒழுங்கு. இதனால் காலம் கடந்து செல்லுமே தவிர, நீதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், இந்தமாதிரி மனித உரிமைகள் விவகாரத்தை தமது அரசியல், பொருளாதார, பாதுகாப்பு நலன்களுக்கான ஒரு கருவியாக இந்த நாடுகள் – அணிகள் – பயன்படுத்துகின்றன. இது இலங்கை விடயத்தில் மட்டுமல்ல, ஏனைய நாடுகள் விடயத்திலும்தான்.

இதனால்தான் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னும் சிறிய அளவிலான நீதி கூட ஆறுதல் கூட, நம்பிக்கை கூட கிட்டாமல் போனது. இதைக்குறித்து நாம் தொடர்ச்சியாகவே குறிப்பிட்டு வருகிறோம். இந்தக் கண்கட்டு வித்தையைப் பற்றிய தெளிவுடன் நாம் செயற்பட வேண்டும் என.

இதேவேளை பாதிக்கப்பட்ட – நீதி மறுக்கப்பட்ட மக்களாக  தொடர்ந்தும் இருக்கிறோம் என்பதை நாம் சொல்லியே – வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அதே அளவுக்கு இந்த நிலையை மாற்றுவதற்கான வழிமுறைகளிலும் உபாயங்களிலும் நாம் ஈடுபட வேண்டும். அப்படிச் செயற்படுவதன் மூலமே நமது (தமிழ் பேசும் மக்களுடைய) கடினமான நிலைமையைக் கடந்து செல்ல முடியும். வெறுமனே ஜெனிவாக்குக் காவடி எடுப்பதாக இருக்கக் கூடாது. அப்படித் தொடர்ந்தும் செய்து கொண்டிருப்போமாக இருந்தால் ஏமாளிகளாகவே ஆகி விடுவோம்.

3. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போதைப்பொருள்  பாவனை, உள்ளிட்ட சமூகச் சீர் கேடுகள் அதிகரித்து வருகிறது? ஏன்  இந்த நிலைமை?  மக்களின் பிரதிநிதி என்ற வகையில்  நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

சமூக வீழ்ச்சியே இதற்குக் காரணம். சமூக வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், சரியான அரசியல் தலைமைத்துவமும் சமூகத் தலைமைத்துவமும் இல்லாமையே. சரியான அரசியற் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இல்லாத சமூகங்களின் நிலைமை இப்படித்தானிருக்கும். அரசியல் தலைமைத்துவம் ஆற்றலின்மையாக – வெற்றிடமாக இருந்தால் அந்த இடத்தைச் சமூகத் தலைமைத்துவம் நிரப்ப வேண்டும். ஒரு விடயத்தைப் பாருங்கள், இயற்கை வளத்தைச் சிதைக்கும் சட்ட விரோத மணல் அகழ்வு, காடழிப்பு மற்றும் சமூகத்தைப் பாதிப்புக்குட்படுத்தும் மது உற்பத்தி (கசிப்புக் காய்ச்சுதல்) போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் சில அரசியற் கட்சிகளின் ஆட்களாக  – ஆதரவாளர்களாக – உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் இவர்களால் எப்படி மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்ய முடியும்? இதேவேளை இந்தச் சமூக விரோத, இயற்கை விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய மக்கள் அமைப்புகளோ சமூகத் தலைமைகளோ இல்லை. ஏறக்குறைய தமிழ்ச் சமூகம் வரண்ட பாலைக்கு ஒப்பாக மாறியுள்ளது.

இப்படியே காணி அபகரிப்பு. ஊழல் முறைகேடுகள், நிர்வாகச் சீரழிவுகள் போன்றவையும் எமது சமூகத்தைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு போதைப் பொருள் பாவனை – விற்பனையின் அதிகரிப்பும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பான கவலையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியும் வெளிப்படுத்தியுள்ளார். இதைக்குறித்து ஊடகங்கள், சமூக மட்ட அமைப்புகள், அரசியற் தலைமைகள், பொலிஸ் மற்றும் சட்டத் தரப்புகள் ஒருங்கிணைந்து செயற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது மிகமிக அவசியமானது. ஆனால், அதற்கு யாரும் இன்னும் முன்வந்ததாகத் தெரியவில்லை. பலருக்கும் தெரிந்தது அரசாங்கத்தை நோக்கி குற்றம் சாட்டும் கைகளை நீட்டுவது மட்டுமே. அரசு தவறு என்றால் அதை எப்படி வழிப்படுத்துவது? அதற்கு எதிராக எப்படிப் போராடுவது? மக்களை, வளங்களை எப்படிப் பாதுகாப்பது என்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். இதற்கான தலைமைகள் எமக்கு வேண்டும். நாம் இவற்றைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கிறோம்.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையே போ தப்பொருள் பாவனையில் அதிகமாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. உடல், உள ரீதியாக இவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் வன்முறைகளிலும் திருட்டிலும் ஈடுபடுகின்றனர். இளைய தலைமுறை பாதிக்கப்பட்டால் எதிர்காலச் சமூகமே பாதிப்புக்குள்ளாகும்.

இன விடுதலை, தேச விடுதலையைப் பற்றியெல்லாம்  பேசுகிறோம். அதற்கு ஆதாரமானவர்கள் எங்கள் இளைய தலைமுறையினரே. ஆகவே நிலத்தைப் பாதுகாப்பதைப்போல, எமது மொழியை, பண்பாட்டை, வளங்களைப் பாதுகாப்பதைப்போல எமது இளைய தலைமுறையையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களே எமது ஆகச்சிறந்த வளமாகும்.

ஆகவே இதைக்குறித்து நாம் மிகக் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும். எமது தரப்பிலிருந்து நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கை, சட்டத்தரப்புகளுடன் ஆலோசனை செய்து அதன் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள், மருத்துவத்துறை, உளவளத்துறை போன்ற தரப்புகளோடு தொடர்பு கொண்டு அவர்கள் மூலமான பாதுகாப்பு நடவடிக்கை எனப் பல வழிகளிலும் செயற்படுகிறோம்.

இங்கே கவனிக்க வேண்டிய கவலைக்குரிய விசயம் என்னவென்றால், இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு ஏதாவது தொண்டு நிறுவனங்கள் நிதி அளித்தால் மட்டுமே விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று பலர் கருதுவதாகும். சுயமான ஈடுபாட்டுடன் இதைக்குறித்துச் செயற்படுவதற்கு ஆட்கள் குறைவாகி விட்டது. இதெல்லாம் நல்ல அறிகுறிகளல்ல.

4.கிளிநொச்சி மாவட்டத்தில்  கரைச்சி பிரதேச சபையினை நகர சபையாக தரம் உயர்த்தும் விடயத்தில் அநீதி, பாரபட்சம் இழைக்கப்பட்டுள்ளதாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பில் விளக்கமளியுங்கள்?

இந்தக் கேள்வியைச் சற்றுத் திருத்தம் செய்து வாசிக்க வேண்டும். கரைச்சிப் பிரதேச சபை நகரசபையாக தரமுயர்த்தப்பட வேண்டும். அது மகிழ்ச்சியளிக்கும் சேதியே. ஆனால், அதற்கான எல்லைகள் தொடர்பாகவே பிரச்சினை. அந்த எல்லைகளை நிர்ணயித்தது யார்? எந்த அடிப்படையில் நிர்ணயம் – வரையறை – செய்யப்பட்டது? இந்த எல்லை நிர்ணயம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அப்போதைய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் இராமநாதன்  ஆகியோர் பொறுப்பாக இருந்துள்ளனர். இவர்கள் இது தொடர்பாக பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இதில் விஜயகலா மகேஸ்வரன் எந்தப் பதவி நிலையிலும் இப்பொழுது இல்லை. ஆனால், சிறிதரனும் அங்கயன் இராமநாதனும்  பா.உக்களாகவே தொடர்கின்றனர். ஆகவே இவர்கள் இது பற்றிப் பேச வேண்டும். ஆனால், இவர்களுடைய தரப்பிலிருந்து இதுவரையிலும் எந்த விளக்கமும் வரவில்லை.

இதேவேளை குறித்த நகரசபைக்கான எல்லையானது இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதற்கான காரணம், கிளிநொச்சி வளர்ந்து வரும் நகரம். தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் ஒரு போதுமே முழுமையானதொரு நகர நிர்மாணத்தைச் செய்யக் கூடியதல்ல. அதன் புவியமைப்பு (மண், நீர் மற்றும் இயற்கை அமைப்பு), இடவசதி (பரப்பளவு), வடிகாலமைப்பு உள்ளிட்ட  நகரத்துக்கான அடிப்படைகளை இதற்குள் சரியாக நிர்மாணிக்க முடியாது. ஒரு நகரம் என்பது நிர்வாகம், வணிகம், பேரங்குகள், கலை, பண்பாட்டு நிறுவனங்கள், தொடர்பாடல், வேலை வாய்ப்புகளுக்கான தொழில்துறை மையங்கள், பொழுது போக்கு மையங்கள், விருந்தினர் விடுதிகள் எனப் பலவற்றை உள்ளடங்கியதாகவே இருக்கும். இதற்கமைய எதிர்காலத்தில் தன்னை விருத்தியாக்கிக் கொள்வதற்கான புவிசார் அமைவிடம் குறிப்பிடப்பட்டுள்ள நகர எல்லைக்குள் இல்லை. அல்லது போதாது. ஆகவே இது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இதைக்குறித்த அறிவுள்ள துறைசார் நிபுணர்களின் பரிந்துரை – ஆலோசனை – இதற்கு முதற்கட்டமாக ஏற்கப்பட வேண்டும். அதோடு சமூக மட்டத்திலான அமைப்புகளுடைய பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வது அவசியம். கிளிநொச்சி நகரம் எதனை அடிப்படையாகக் கொண்டது? அல்லது முதன்மையாகக் கொண்டது என்பதையும் நிர்ணயம் செய்வது நல்லது. அதாவது கல்வி சார் நகரமா? அல்லது பண்பாட்டு நகரமா? (city of culture) அல்லது வணிகப் பொருளாதார நகரமா? (Commercial Economic City)கைத்தொழில் (City of Industrial) அல்லது விவசாயப் பொருளாதார நகரமா? (City of Acriculture Hub)  என்று தெரிந்து (தெளிந்து) கொண்டால்தான், அதற்கான நகரசபை எல்லையையும் நிர்ணயம் செய்ய முடியும்.

எமது நிலைப்பாடு கிளிநொச்சி விவசாயப் பொருளாதார நகரம் (City of Acriculture Hub) என்பதாகும். ஆகவே இதனுடைய எல்லை மேலும் விரிவு படுத்தப்பட்டு அறிவியல் நகர் வரை உள்ளடக்கப்பட வேண்டும். இதற்கான உத்தேச வரைபடத்தை நாம் துறைசார் அறிஞர்கள், மக்களுடன் இணைந்து தயாரித்துள்ளோம். அதை அப்படியே ஏற்க வேண்டும் என்றில்லை. ஆனால் எமது பரிந்துரை நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள நகரசபை எல்லையானது  சமூக ரீதியாக பிரிவினையை உண்டாக்கும் வகையில் சிந்திக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. அத்துடன் மூன்று வட்டாரங்களை மட்டுமே உள்ளடக்கியதாகவும் உள்ளது. இப்போதுள்ள தேர்தல் முறையில் மூன்று வட்டாரங்களிலும் தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகக்கூடியது ஐந்து ஆகும். இதில் நகரபிதாவாக ஒருவர் பதவியேற்றால் மீதி நான்கு உறுப்பினர்களைக் கொண்டதாகவே நகரசபை இயங்க வேண்டியிருக்கும். இது எவ்வளவுக்குச் சாத்தியமானது?

இந்த மாதிரிப் பல குறைபாடுகள் உள்ளதால் இது தவறு. பாரபட்சமானது, தவறானது என்று பலரும் எதிர்க்கிறார்கள்.


5. தமிழ் மக்களின் விடயத்தில்   செயற்பாட்டு ரீதியாக எந்த
நடவடிக்கைக்கும் செல்லாத அரசு, புலம் தமிழ் மக்களின் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

இந்த அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களும் (மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கமும்) புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு கேட்டிருக்கின்றன. அவையும் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் எடுத்ததில்லை. ஒரு பக்கத்தில் பங்களிக்க முடியாத சட்டப் பிரச்சினைகள், நடைமுறைச் சிக்கல்களை வைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் “வாருங்கள், வந்து முதலிடுங்கள்” என அழைப்பது பயனற்றது. இதுவே தொடர்ந்தும் நடக்கிறது. அதாவது என்னதான் கெஞ்சி அழைத்தாலும் யாரும் வர மறுப்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடகங்களில் காட்சிப்படுவதற்காக ஒவ்வொரு ஜனாதிபதியும் சில புலம்பெயர் தமிழ்ப்பிரதிநிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருப்பார்கள். இப்பொழுது லண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதேமாதிரி ஒரு சந்திப்பைச் செய்திருக்கிறார். இதுவும் பயனற்றதாகவே முடியும். ஆனால், நீங்கள் கேட்டிருப்பதைப்போல தன்னார்வமாக முதலீட்டாளர்கள் வந்து முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய சூழலும் இலகு நடைமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய அடிப்படை வேலைகளை அரசாங்கம் செய்யவே இல்லை. அதைச் செய்தால் அரசாங்கம் அழைக்காமலே பலரும் வருவர்.  புலம்பெயர் சமூகம் அதற்கான நிதி, பொருளியல் அறிவு, துறைசார் நிபுணத்துவத்துடன் உள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் மிக அவசியமானது.

இலங்கை அரசு முதலில் ஒரு செயற்பாட்டு முறைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்பாட்டுக்கு வராத வாக்குறுதிகள், திட்டங்கள், அறிவிப்புகள் என்றே அதனுடைய பல விடயங்கள் உள்ளன. இதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாற்றியமைக்க வேண்டும். அதைச் செய்வார் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் வரலாறு கடுமையான தண்டனையைக் கொடுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்