நூபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன?

ஞாயிற்றுக்கிழமை கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை வரவழைத்து, முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹாவில் உள்ள இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு சம்மன் அனுப்பியது.

கத்தார் வெளியுறவு அமைச்சர் சுல்தான் பின் சாத் அல்-முரைக்கி, இது தொடர்பாக கத்தாரின் அதிகாரப்பூர்வ பதிலை இந்திய தூதரிடம் கையளித்தார்.

அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவை ஆளும் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது, இதில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்தக் கருத்துக்களுக்கு இந்திய அரசு சார்பில் பகிரங்க மன்னிப்பு மற்றும் கண்டனத்தை கத்தார் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தற்போது கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, அவர் அங்கு கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல்-தானியை சந்தித்தார்.

இதுகுறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”இழிவான கருத்துகளை வெளியிடுவோர் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

முகமது நபி குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கத்தார் வெளிப்படுத்திய கோபத்திற்கு தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது.

கத்தார் மற்றும் குவைத்தை அடுத்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) இந்தப் பிரச்னைக்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய ஒருவரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறியது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்த ஓ.ஐ.சி தனது ட்வீட்டில் ஹிஜாப் தடை மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளது.

முகமது நபிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.ஐ.சி கோரியுள்ளது.

கத்தாரின் இந்தியத் தூதரகத்தின் கருத்து

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இரு நாட்டுத் தூதர்கள் இடையேயான சந்திப்பில், மத ஆளுமை குறித்து இந்தியாவை சேர்ந்தவர்கள் பதிவிட்ட ஆட்சேபனைக்குரிய ட்வீட்கள் குறித்துக் கவலை தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார்.

இந்த ட்வீட்கள் இந்திய அரசின் கருத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்று இந்திய தூதர் கூறினார். இவை ‘விஷமத்தனமானவை’ என்று அவர் குறிப்பிட்டார்.

“நமது கலாசார, பாரம்பரியம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான மரபுகளுக்கு ஏற்ப, இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் தனது உயர்ந்த மரியாதையை அளிக்கிறது.

தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு, எந்த ஒரு மதத்தவரையும் இழிவுபடுத்துவதைக் கண்டித்தும், அனைத்து மதத்தினரின் மரியாதையை வலியுறுத்தியும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா-கத்தார் உறவுகளுக்கு எதிராகத் தன்னல நோக்கம் கொண்டவர்கள், மக்களைத் தூண்டிவிடுவதற்காக இந்தக் கீழ்த்தரமான கருத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

நமது இருதரப்பு உறவின் வலிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் இத்தகைய தவறான செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்