
இன்று (17) அதிகாலையில் இருந்து காத்திருந்த பொதுமக்கள் மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி நுவரெலியா பதுளை வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று மக்கள் நுவரெலியா பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு உரிய முறைமையை ஏற்படுத்தக்கோரியும், வினியோகம் செய்யும் திகதியினை உறுதிப்படுத்த கோரியும் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்தனர். பொதுவாக நுவரெலியா – ஹட்டன் , நுவரெலியா – இராகலை போன்ற பிரதான வீதிகளுடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் பயணிகள் பெரும் சிரமத்தினை சந்தித்தனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு நுவரெலியா பொலிஸ் அத்தியட்சரின் தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி மண்ணெண்ணெய் வழங்குவதாக உறுதி கூறியதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.