
புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றில், பயணிகளின் தொலைபேசிகளுக்கு நிர்வாணப் புகைப்படம் பரிமாறப்பட்டதால், விமானத்தை மீண்டும் விமான நிலைய வாயிலுக்கு கொண்டு செல்லப் போவதாக விமானி எச்சரித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றது.
சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானி ஒருவரே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரிலுள்ள வில்லியம் பி. ஹோபி விமான நிலையத்திலிருந்து மெக்ஸிகோவின் கெபோ சான் லூகாஸ் நகருக்கு இவ்விமானம் செல்லவிருந்தது.
அப்போது, பயணிகள் பலரின் கைத்தொலைபேசிகளுக்கு இனந்தெரியாத ஒரு சக பயணியினால் நிர்வாண புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்தது.
அப்பிள் ரக தொலைபேசியிலுள்ள எயார்ட்ரொப் அப்ஸ் மூலம் இப்புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தது.
எயார்ட்ரொப் செயலியானது, அருகிலுள்ள வேறு ஐபோன்களுக்கு புளூடூத் அல்லது வை—பை மூலம் பைல்களை அனுப்ப அனுமதிக்கிறது.
இந்த நிர்வாண புகைப்பட விவகாரத்தை, விமானியின் கவனத்துக்கு விமான ஊழியர்கள் கொண்டுவந்தனர்.
அதையடுத்து அனைத்துப் பயணிகளுக்கும் விமானி அறிவிப்பொன்றை விடுத்தார்.
‘நிர்வாணப் புகைப்படம் அனுப்பும் நடவடிக்கை தொடர்ந்தால், நான் விமானத்தை மீண்டும் வாயிலுக்கு கொண்டு செல்வேன். அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்படுவார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்படுவார்கள். அத்துடன் விடுமுறைப் பயணம் பாழாகிவிடும்.’ என அவர் கூறினார்.
விமானப் பயணிகளில் ஒருவரான தெய்க்லோர் மார்செய்லிஸ் எனும் பெண் இது தொடர்பாக கூறுகையில், தானும் தனது நண்பர்களும் விமானத்தில் ஏறியபோது, அங்குள்ள பயணிகளுக்கு எயார்ட்ரொப் மூலம் ‘பைல்’ ஒன்று அனுப்பப்பட்டுள்ளமைக்கான அறிவித்தல் கிடைத்திருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
தான் அந்த பைலை திறப்பதற்கு மறுத்துவிட்டதாகவும், ஆனால் தனக்கு முன்னால் இருந்த இரு பெண்கள் அந்த அறிவித்தலை ஏற்றுக்கொண்டு பைலை திறந்தபோது, அவர்களின் தொலைபேசியில் நிர்வாண ஆண் ஒருவரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இதனால் விசனமடைந்த பெண்ணொருவர் இது குறித்து விமான ஊழியருக்குத் தெரிவித்தார்.
அதன்பின், என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு விமானியிடம் விமான ஊழியர் ஒருவர் சென்றார். அவ்விமானி இவ்விடயத்தை மிகச் சிறப்பாக கையாண்டார் எனவும் மார்செலிஸ் கூறியுள்ளார்.