நானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் – ஷிகர் தவான் சூசக தகவல்

தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் நானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி ஆடிவருகிறார். இதற்கிடையே காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தவான் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார். 
தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுலும் சிறப்பாகவே ஆடிவருவதால் இந்த ஆண்டிற்கான சர்வதேச டி20 அணியில் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தேர்வுக்குழுவிற்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான நேற்றைய டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான், தானும் களத்திற்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

‘மூன்று வீரர்களும் (ரோஹித், கே.எல் மற்றும் நான்) சிறப்பாக செயல்படுகிறோம். கடந்த ஆண்டு ரோகித் சர்மாவிற்கு மிகச்சிறந்த ஆண்டாகும். ராகுல் 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவர் ஒரு நல்ல வீரர். அதேபோல் நானும் நேற்று களத்தில் சிறப்பாக செயல்பட்டேன்.
அணியில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் பற்றி நான் யோசிக்கவில்லை, ஏனென்றால் அந்த விஷயம் என் கைகளில் இல்லை. சிறப்பாக செயல்படுவதும் விளையாடுவதும் மட்டுமே என் கைகளில் உள்ளது’, என தவான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கு தவானை தேர்வு செய்ய மாட்டேன். அவருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையில் போட்டியில்லை. கேஎல் ராகுல் மட்டும்தான் வின்னர், என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்