நாட்டுக்கு பெருமை சேர்த்துவந்த சிலோன் டீ ஏற்றுமதி 1999ஆம் ஆண்டின் பின் இவ்வருடம் பாரியளவில் வீழ்ச்சி

நாட்டுக்கு பெருமை சேர்த்துவந்த சிலோன் டீ ஏற்றுமதி 1999ஆம் ஆண்டின் பின் இவ்வருடம் பாரியளவில் வீழ்ச்சியைடைந்திருக்கின்றது.

இரசாயன உரத்துக்கான தடையே இதற்கு காரணமாகும். அதனால் நாட்டுக்கு அதிகமான டொலரை பெற்றுத்தரும் தேயிலை ஏற்றுமதியை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலை  மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் தற்போது மின் கட்டணத்தையும் அதிகரித்திருக்கின்றது.

மக்களின் நிலைமையை உணர்ந்து மின் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். என்றாலும் வெறும் கண்துடைப்புக்காக அரசாங்கம் சில பொருட்களின் விலையை குறைத்திருக்கின்றது. இது மக்களை ஏமாற்றும் விடயமாகும்.

அத்துடன் நாட்டில் டொலர் இல்லாத பிரச்சினை இருந்து வருகின்றது. ஆனால் நாட்டுக்கு டொலரை பெற்றுக்கொள்ள தேசிய வேலைத்திட்டம் இதுவரை அமைக்கப்படவில்லை. நாட்டுக்கு அதிகமாக டொலரை பெற்றுத்தரும் ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால் பெருந்தோட்ட தேயிலை ஏற்றுமதி கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனை சீர் செய்வதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  குறிப்பாக 2021ஆம் ஆண்டு 3மாதங்களில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் அது 2022 முதல் காலாண்டில் 63.7 மில்லியன் கிலோவாகக் குறைவடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியானது, 1999 முதல் காலாண்டுக்கு பிறகு  ஏற்றுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும்.

அத்துடன் இந்த தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சிக்கு ரஷ்யா, உக்ரைன் யுத்தம் காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் இரசாயன உரம் தடைசெய்யப்பட்டதே தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முறையான வேலைத்திட்ட அமைக்கவேண்டும். சர்வகட்சி அமைப்பதன் மூலமே இதற்கு தீர்வுகாண முடியும். ஆனால் அமைச்சுப்பதவிக்கோ சலுகைகளுக்காகவோ அல்லாமல் நாட்டின் பிரச்சினையை தீர்க்கக்கூடிய நீண்டகால திட்டத்துடனே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்