நாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…!

நாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை முதல் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இதன்படி, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே அமுலாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

நாளை முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 5 வீதிகள் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் கொழும்பு வரை பயணிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி வீதி ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்புக்கு 5 வீதி ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் மினுவாங்கொடை வரையில் மாத்திரம் பயணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் காலி வீதி ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் பாணந்துறை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அவிஸவாளை ஊடாக கொழும்பு – ஹைய்லெவல் மற்றும் லோ லெவல் வீதி ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளை அவிஸாவளையில் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாபிட்டியில் இருந்து நீர்கொழும்பு வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவுள்ளன.

அதேநேரம் தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகள் கொட்டாவை வரை மாத்திரம் பயணிக்கவுள்ளன.

பேருந்து சேவைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாவதுடன் மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் தொடரூந்துகளில் பயணிப்பதற்காக 16 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பயணிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நாளை முதல் தொடரூந்து சேவைகளுக்காக 29 தொடரூந்துகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்து.

இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்