நாடளாவிய ரீதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள்..!

இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனையடுத்து, இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை நாட்டின் பல பிரதேசங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ். மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று காலை 6.45 மணியளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இடம்பெற்றது.

நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் என்பன மௌலவி எம்.ஏ.பைசர்னால் நிகழ்த்தப்பட்டது.

இன்றைய பெருநாள் திடல் தொழுகையில் யாழ். வாழ் முஸ்லிம்கள், தாய்மார்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேபோல மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம்  நோன்பு  பெருநாளை கொண்டாடுகின்றனர்.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் காலை 8 மணியளவில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.

காலை 7 மணிக்கு பெண்களுக்கும் காலை 8 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

குறித்த பெருநாள்  தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நோன்பு பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள் பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

இதேநேரம், வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று காலை 7.30 மணிக்கு இப்தார் விசேட தொழுகை சிறப்பாக இடம்பெற்றது.

பள்ளிவாசலின் இமாம் அமீர் உல்ஹாவிஸ்சினால் விசேட தொழுகை   மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா தவ்கீத் ஜமாத் பள்ளிவாசலிலும் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.

அஸ்ஸேக்தஸ்னீம் தைமியினால் விசேட தொழுகை நடத்தப்பட்டதுடன், இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவேவேளை, 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று காலை 6.15 மணிக்கு புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

3 வருடங்களுக்கு பின்னர் மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேநேரம், மலையகத்திலும் முஸ்லிம்கள் நோன்பு பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ஹட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி ஷாஜகான் தலைமையில் இடம்பெற்ற விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஹட்டன் முஸ்லிம் வாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்