நல்லாசிரியர் யார்? – கருணாகரன்

ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்புக்குரிய மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வரும்போது வரவேற்கும் காட்சியை யுடியூப்பில் பார்த்தேன். ஒவ்வொரு மாணவரையும் ஒவ்வொரு விதமாக வரவேற்கிறார். வருகின்ற மாணவர்களோடு விதவிதமாக கை குலுக்குகிறார். அவர்களுடன் சேர்ந்து ஆடுகிறார். ஆடலும் பாடலுமாக ஒரே கொண்டாட்டம். இவ்வளவும் வகுப்பறை வாசலில்தான் நடக்கிறது. அதிகபட்சம் நான்கு ஐந்து நிமிடத்துக்குள் எல்லாமே முடிந்து விடுகின்றன. அதாவது சகல மாணவர்களையும் வரவேற்று முடித்து விடுகிறார். ஒவ்வொரு மாணவருக்கும் 10 – 15 நொடிகள்தான் வழங்கப்படுகிறது. அதற்குள் மிக வேகமாக அவர்கள் கைகுலுக்கி, ஆடி மகிழ்ந்து முடித்து விடுகிறார்கள். இதற்கான உற்சாகமே இந்த வேகத்தைக் கொடுக்கிறது.

அடுத்ததாக அந்த ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் படிப்பிப்பார் என்ற கற்பனை எழுகிறது. அதையும் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால், அந்தக் காட்சியை குறித்த யுடியூப்பில் பார்க்க முடியவில்லை. அதை நாம்தான் நம்முடைய கற்பனையினால் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது அந்த ஆசிரியரிடம் நாமும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அல்லது அவரிடம் நம்முடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என. அல்லது அந்த ஆசிரியரைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

உண்மையில் ஆசிரியரின் கற்பனையும் துணிச்சலுமே கல்வியில் செயற்பட வேண்டும்; வகுப்பறையில் நிகழ வேண்டும்.

அதுவே மாணவர்களை வளப்படுத்தும். அவர்களைச் செழுமைப்படுத்தும். ஊக்குவிக்கும். கல்வியை ஆர்வத்தோடு கற்க வைக்கும். எந்தக் கடினமான பாடத்தையும் இலகுவாகக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆசிரியரே.

எதையும் அறிய வேண்டும் என்று துருதுருக்கும் பருவம் மாணவர்களுடையது. அந்த ஆர்வத்துக்கும் துடிப்புக்கும் ஏற்றமாதிரித் தம்மை மாற்றி் கொள்ளும் ஆசிரியர்கள் வெற்றியடைகிறார்கள். மற்றவர்கள் மாணவர்களிடத்தில் எதிர்மறையாளர்களாக – வில்லன் – வில்லிகளாகி விடுகிறார்கள்.

இதனால்தான் நல்லாரியர் அமைவது பெரும்பேறு என்று சொல்வார்கள். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்லி ஆறுதலடைவோரும் உண்டு. நான் இதற்கு விலக்கானவன். எனக்குச் சிறந்த ஆசிரியர்கள் வாய்த்திருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர. அவர்களைப் பற்றிக் கவலையில்லை. வாய்த்த ஆசிரியர்களால்தான் கடினமான பாடங்களைக் கூட இலகுவாக, ஆர்வத்தோடு படிக்க முடிந்தது. அதில் ஒருவர் சிக்மறிங்கம் றெஜினோல்ட். றெஜினோல்ட்டின் பாடம் கணிதம். அவருக்காகவே நாங்கள் பாடசாலைக்குச் சென்றோம். அவருக்காகவே படித்தோம். அது என்னவொரு அற்புதமான கற்கையும் காலமும்!

 ஆனால், சிலருக்கு அப்படி  அமைவது இல்லைத்தான். அவர்களுக்குப் பாடங்கள் கசக்கும். வகுப்புக் கசக்கும். பாடசாலை கசக்கும். மாணவராக இருப்பதே கசக்கும். இதற்குப் பாதிக்காரணம், நல்லாசிரியர் அமையாததே. நல்லாசிரியர் அமையப்பெற்றால் எல்லாமே சரியாகி விடும்.

சில இடங்களில் நல்லாசிரியர் அமைந்தாலும் அவர்களைச் சுயாதீனமாக, புதுமையாளர்களாக இயங்க அனுமதிக்காத பாடசாலை நிர்வாகங்கள் உள்ளன. விதிமுறைகளை மீறிவிடக் கூடாது. பாடத்திட்டங்களுக்குள்ளும் பள்ளி நிர்வாக விதி என்ற சட்டகத்துக்குள்ளும் நின்றியங்க வேண்டும். அதை மீறினால் ஆபத்தாகி விடும் என்று பதறுகின்ற அதிபர்கள் உள்ள பாடசாலைகள் சிறைச்சாலைக்கு நிகர். அங்கே, மாணவர்களுடைய நிலையும் ஆசிரியர்களுடைய நிலைமையும் பரிதாபம் மட்டுமல்ல, மோசமாகியும் விடும். அப்படியான பல பாடசாலைகள் நம்முடைய சூழலில் உண்டு. ஏறக்குறைய அவை கல்லறைகளுக்குச் சமன்.

இந்த  மாதிரிப் பாடசாலைகளும் அதிபர்களும் பொருத்தமற்ற ஆசிரியர்களும் இருப்பதால்தான் பல மாணவர்கள் தேறாமல் போகிறார்கள். அவர்களே சமூகத்தில் பின்தங்கி விடுகிறார்கள். அல்லது மோசமான மனிதர்களாக மாறிச் செல்கின்றனர். இன்று இறைய தலைமுறை போதைப்பொருளுக்கு அடிமையாகிறது என்று கவலைப்படுகிறோம். படிப்போ, தொழிலோ இல்லாமல் பல இளைஞர்கள் தெருச்சுற்றுகிறார்கள் என்று விமர்சிக்கிறோம். இவர்கள் இப்படிச் செல்வதற்குப் பின்னால் உள்ள கதையைத் தேடினால், பல கசப்பான உண்மைகள் புலப்படும். அவை இந்த மாதிரி பொறுப்பற்ற பெற்றோர், சரியற்ற பாடசாலைகள் எனத் தெரியவரும். அநேகமான சந்தர்ப்பங்களில் இதுதான் உண்மை நிலவரம்.

கல்வியில் எப்போதும் கவனிக்க வேண்டியது, ஆசிரியர் – மாணவர் உறவாகும். அந்த உறவு சரியாக அமைந்தால் அது தலைமுறைகளுக்குக் கிடைத்த வரம் – பேறு. சரியாக அமையவில்லையென்றால் விதி இழுத்துத் தெருவில் நம்மை விட்டு விடும். சமூகமே பாழாகி விடும்.

ஆசிரியர் – மாணவர் உறவைப் பற்றி உளவியல் தொடக்கம் கற்கை முறை வரை ஏராளமாகச்சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியரின் மனதில் எழுகின்ற புதுமையான எண்ணங்களும் நல் மனப்பாங்குமே இதில் முதல் வெற்றியைக் கொடுப்பது. பல நல்லாசிரியர்களைப் பல இடங்களிலும் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமக்கு வழங்கப்படுகின்ற சுற்று நிருபங்களுக்கும் விதிகளுக்கும் அப்பால் சென்று சுயாதீனமாகச் செயற்படுவார்கள். அத்தகையவர்களால்தான் புதுமைகளைப் படைக்க முடிகிறது. அவர்களே புதிது புதிதாக எதையாவது உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜயசேகரன் என்றொரு கணித ஆசிரியர் இருக்கிறார். மாணவர்கள் – ஆசிரியர் என்ற உறவை அவர் நட்பினால் கட்டியெழுப்பியுள்ளார். கணிதத்தை அவர் பாடத்திட்ட விதிகளின்படி படிப்பிப்பதில்லை. மாணவர்களுடன் பழகுவதையும் கூட ஆசிரியர் – மாணவர் என்ற அடிப்படையில் இடைவெளியைப் பேணி நடப்பதில்லை. வகுப்பறையை அவர் கொண்டாட்டக் களமாக மாற்றி விடுவார். கற்பித்தலை மிக இலகுவாக்கி, அவர்களுடைய ஆர்வத்தைப் பெருக்கிக் கொள்வார். இதற்குக் காரணம், விஜயசேகரன் நிறையப் புத்தகங்கள் வாசிப்பார். நாடகங்களை இயக்குவார். இப்படித் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்வதால், அவரால் புதிதாகச் சிந்திக்கக் கூடியதாக உள்ளது. வகுப்பறையில் புதுமைகளைச் செய்ய முடிகிறது. மாணவர்களை நெருங்கிச் செல்வதற்கான வழிகளை அவருடைய வாசிப்பும் நாடக அனுபவங்களும் கொடுக்கின்றன. இதனால் அவர் வகுப்பறையை ஒரு செயற்பாட்டுக் களமாக்கி விடுகிறார். தான் ஒரு ஆசிரியர் என்ற அதிகார நிலையிலிருந்து விலக்கி, தானும் ஒரு சக பயணி என்ற நிலையை உருவாக்கிக் கொள்கிறார். இங்கே ஆசிரியர் – மாணவர் என்ற அதிகாரப் படிநிலை கிடையாது. அது அழிந்து விட்டால் நெருக்கம் உண்டாகி விடும். அந்த நெருக்கத்தில், தோழமையில் மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைச் சிறப்பாகச் செய்வார்கள். எதையும் மறைக்கவோ எதிலிருந்தும் விலகிச் செல்லவோ மாட்டார்கள். பரீட்சைப் பெறுபேறு தொடக்கம் மாணவர்களுடைய பன்முக ஆற்றல் வரை மிகச் சிறப்பாக இருக்கிறது.

இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் சுட்டிக் கொள்ள வேண்டும். எல்லா மாணவர்களையும் சமநிலையில் நோக்க வேண்டியது அவசியமாகும். சில இடங்களில், சில வகுப்பறைகளில் அப்படி நிகழ்வதில்லை. சில மாணவர்களுக்குச் சில ஆசிரியர்கள் சிறப்பிடமளிப்பார்கள். சிலரை விட்டு விடுவார்கள்.இது மாணவர்களிடத்திலே குழப்பத்தை உண்டாக்கும். மட்டுமல்ல, அவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராகவே பல மாணவர்கள் உருவாகி விடுவார்கள். பின்னாளில் அவர்களுடைய சமூகப் புரிதலும் தவறாகவே அமைந்து விட வாய்ப்பும் ஏற்படுகிறது.

வகுப்பறை கலகலப்பாக இருக்கும்போது மாணவர்களுடைய மனது மகிழ்ச்சியால் நிறைந்து விடுகிறது. அந்த மகிழ்ச்சிக்காக அவர்கள் பாடசாலையைத் தேடி வருவார்கள். பாடத்தை ஆர்வத்தோடு படிப்பார்கள். வீட்டு வேலைகளைத் தவறாமல் செய்வார்கள். ஆசிரியரின் அறிவுரைகளை அன்போடு கேட்டு ஒழுகுவார்கள். இங்கே ஒரு அறிவெழுச்சியும் ஆளுமைச் சிறப்பும் தானாகவே மேலெழத் தொடங்குகிறது. ஒரு போதும் பாடசாலையையோ பாடத்தையோ “கட்” பண்ண மாட்டார்கள்.

அவ்வாறான ஆசிரியர்களால்தான் மாணவர்களை வெற்றியை நோக்கி முன்னகர்த்த முடிகிறது. அவர்கள்தான் பாடசாலையை உயர்த்துகிறார்கள். அவர்களே பெறுபேறுகளைச் சிறப்பிக்கிறார்கள். காலத்தின் அடையாளமாக மாறி நிற்கிறார்கள்.

இதற்கு மீறல் அவசியம். சுயாதீனமாகச் செயற்படுவதற்கான மீறல். அது சரியான மீறல். ஆம், சரியானவற்றுக்கான மீறலாகவே அது இருக்கும். அவர்கள் அப்படித்தான் அதைச்செய்வார்கள். அவர்களுக்கு மீறலின் எல்லைகள் தெரியும். அந்த எல்லைக்குள் நின்று கொண்டு, பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் தங்களுக்கும் இடையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் தங்களுடைய சுயாதீனக் கற்கையை நடைமுறைப்படுத்துவார்கள்.

எனக்கு மலேசியாவில் ஒரு நண்பர் இருக்கிறார். ஆசிரியர். அங்குள்ள அரச பாடசாலையில் படிப்பிக்கிறார். பெயர் நவீன். எழுத்தாளர். அவருடைய வகுப்பறை எப்போதும் கொண்டாட்டக்களம். அவருடைய மாணவர்கள் எப்போதும் திருவிழாவில் நிற்பதைப் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். நிறைய வாசிக்கிறார்கள். கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். வகுப்பறையில் மட்டுமல்ல, தன்னுடைய மாணவர்களை சூழலுடனும் ஒன்றிணைய வைக்கிறார் நவீன். காடுகள், ஆறுகள், அயலில் உள்ள வீடுகள், பூங்கா, நகரம் என எல்லா இடங்களிலும் அவர்களுக்கான பயில்தல்களை நிகழ்த்துகிறார்.

இதற்கு கை கொடுப்பது நவீனின் வாசிப்பும் புதிய தேடுதலுமாகும். ஆசிரியர்களாக இருப்போர் நிச்சயமாக நிறைய வாசிக்க வேண்டும். எவ்வளவு பட்டங்களைப் பெற்றிருக்கிறோம், பதவிக்கான பரீட்சைகளில் தேறியிருக்கிறோம் என்பதையும் விட பரந்த வாசிப்பு இருக்குமானால் அவர்களால் புதுமையாகச் சிந்திக்க முடியும். மாணவர்களுக்கு அவர்களால்தான் பயன் அதிகம்.

பல அதிபர்கள், அதிபருக்கான தரத்தில் உயர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால் நிர்வாகத்தில், அணுகுமுறைகளில், ஆற்றல், ஆளுமைகளில் தோற்றுப் போனவர்களாகவே உள்ளனர். இங்கே அதிபருக்கான தரம் என்பது அவர் பெற்ற பரீட்சையின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை.

இந்தப் பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ஆசிரியர் தன்னுடைய சுயாதீனத்தின் அடிப்படையில்தான் தன்னுடைய வகுப்பு மாணவர்களை வரவேற்கிறார். அது அவருடைய எண்ணம். கற்பனை. முயற்சி. துணிவு. அத்தகைய துணிவு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் வேண்டும்.

அங்கே அந்தப் பாடசாலையில் அத்தகையை மரபு என்று ஏதுமில்லை. ஆகவே அவர் சுயாதீனமாக – தன்னுடைய கற்பனைத் திறனுக்கு அமைய அதைச் செய்கிறார். யார் வந்தாலென்ன விட்டாலென்ன? யாரைப் பற்றியும் அவருக்குக் கவலைகள் இல்லை.  அவரைப் பொறுத்தவரை தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு எது பொருத்தமோ, எது தேவையோ, எது அவர்களை உற்சாகப்படுத்துமோ, மகிழ்ச்சியைத் தருமோ, அதைச் செய்கிறார்.

வழமையான சிந்தனையோடிருக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது எரிச்சலாக – தலையிடியாகக் கூட இருக்கும். அதைப் பற்றி நம்முடைய ஆசிரியருக்குக் கவலை இல்லை. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை கல்வி என்பது புதிதளித்தலாகும். அப்படிப் புதிதை அளிக்க முற்படும்போது அது ஒரு வகையில் மீறலாகவே இருக்கும்.

ஆம், கல்வி என்பது ஒழுங்குகளை மேற்கொள்வதும் ஒழுங்குகளை மீறுவதுமாகும். ஒழுங்குகளைப் பேணுவதென்பது, அனைத்துத் துறைகளிலும் ஏற்கனவே கண்டறியப்பட்ட தேவையான அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தொடர்வதாகும்.

இரண்டும் சமனிலையில், சமநேரத்தில் நிகழ வேண்டியவை.

இதற்குச் சுயாதீனமும் புதுச் சிந்தனையும் தேவை.

இதைப்புரிந்து கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்களே மெய்யான வளமாக்கிகள், வழிகாட்டிகள். இவ்வாறான ஆசிரியர்களைப் பெற்றுள்ள மாணவர்கள் பெரும்பேறுடையோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்