நரேந்திர மோதி வருகை: சென்னையில் பலூன் பறக்கவிடுவதற்கு தடை

பிரதமா் நரேந்திர மோதி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது என்று தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திரமோதி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைப்பார். அன்று தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோதி, மறு நாள் ஜூலை 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதியும், அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையிலும், சென்னையில் இரு நாள்கள் டிரோன்கள், சிறிய வகை ஆளில்லாத விமானங்கள், பாராசூட்டுகள் ஆகியவற்றுக்கு ஜூலை 28, 29ஆம் தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காற்று பலூன்கள், வாயு பலூன்கள் பறக்க விடுவதற்கும் தடை விதித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பீமாவரம் சம்பவம்: ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரா் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாள் விழாவில் கடந்த 4-ஆம் தேதி பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி சென்றபோது, காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனா். அந்த பலூன்கள் மோடி பயணித்த ஹெலிகாப்டா் மீது மோதுவது போல சென்றதால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதனால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் சென்னையில் பலூன்கள் பறக்கவிடுவதற்கும், இம்முறை அதிகாரபூா்வமாக தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்