நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் 

பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இன்று இணைந்துள்ளார். இதையடுத்து அந்தக் கட்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கட்சி உறுப்பினர்களாக உள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் இருந்தால் மட்டுமே முடியும். அதை உணர்ந்த பின்னர் தான் நான் பாஜகவில் இணைத்துள்ளேன் என்று தன்னுடைய முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை குஷ்பு.

இதன்மூலம் பாஜகவில் சேர்ந்துள்ள தமிழக நடிகர், நடிகைகளின் பட்டியலில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி. சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் எனத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.

கடந்த ஜூலை மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பதவிகளைப் பெற்ற தமிழ் நடிகர், நடிகைகளின் பட்டியல்:

மாநில செயற்குழு உறுப்பினர்கள் – ராதாரவி, மதுவந்தி, கெளதமி, நமீதா, குட்டி பத்மினி, விஜயகுமார், ஜெயலட்சுமி

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவர் – காயத்ரி ரகுராம்

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்கள் – தீனா, பேரரசு, பெப்சி சிவா, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி

மாநில செயற்குழு அழைப்பாளர்கள் – கங்கை அமரன், கஸ்தூரி ராஜா

மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர் – ஆர்.கே. சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்