
‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ பட புகழ் நடிகர் வெற்றி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘இரவு’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

‘சிகை’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்: இரவு’. இதில் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, பிக் பொஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை M10 புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். எஸ். முருகராஜ் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”வீடியோ கேம்ஸ் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையில், அவர் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் நேரில் வர தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஓர் இரவில் நடைபெறும் பரபரப்பு மிகுந்த சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. பேய் கதைகள் பல வந்திருந்தாலும் ‘இரவு’ படத்தின் திரைக்கதை, உணர்வை மையமாக கொண்டிருக்கும்.” என்றார்.
திரில்லர் படங்களைத் தொடர்ந்து தெரிவு செய்து நடித்து வரும் அருள்நிதி போன்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் வெற்றியும் இணைந்திருக்கிறார். நடிகர் வெற்றியின் ‘இரவு’ படம், வெற்றிப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.