“தொல்பொருள் சின்னங்களை அழிப்பது முன்னோர்களை அவமதிப்பதாகும்”

எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பாதுகாப்பு செயலாளரான எனது தலைமையில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டன.

அதில் ஒன்று, கிழக்கில் உள்ள தொல்பொருள்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியாகும். சுமார் 1000துக்கும் அதிகமான தொல்பொருள் சின்னங்கள் கிழக்கில் உள்ளன.

அவற்றின் நிலைமையை காணும் போது, மிகவும் சோகத்துக்கு உரியதாகவே உள்ளது. எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற அடையாளங்கள் இவை. இவற்றை சேதப்படுத்தல் அல்லது அழிப்பது என்பது முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும். எனவே இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொல்பொருள்கள் அழிக்கப்படவதை அல்லது சிதைக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவேதான் அதனை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது.

இந்த செயலணியை உருவாக்கும் போது, அதில் இன, மத, மொழி பாகுபாடுகள் பார்க்கப்படவில்லை. துறைசார் நிபுணர்களே உள்ளடக்கப்பட்டுள்ளனர். நாங்கள் எந்தவொரு நேரத்திலும் இன, மத, மொழி வேறுபாடுகளை பார்த்தது கிடையாது.

பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோவில்கள், முஸ்லிம் பள்ளிகள் என, அனைத்தையும் சமமாகவே மதிக்கின்றோம்.

யுத்தக்ககாலத்திலும் கூட நாங்கள் மாமிச உணவுகளை எமது வீரர்கள் கொண்டு செல்ல யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள சூழலுக்கு அனுமதித்தது கிடையாது. அந்தளவுக்கு நாங்கள் அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்துகின்றோம்.” என்றார்.

முகநூலில் நாம்