தேவை – போருக்குப் பிந்திய அரசியல் – கருணாகரன்

“தமிழரசுக் கட்சி காலமாகி விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏறக்குறைய செல்லாக் காசாகி விட்டதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால், அடுத்ததாக உங்கள் தெரிவு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியா? அல்லது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியா? அல்லது ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமா? அல்லது சிவாஜிலிங்கம் –ஸ்ரீகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சியா? அல்லது வேறு ஏதாவது உண்டா?” என்று கேட்கின்றனர் சில நண்பர்கள்.

இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? ஏனென்றால், இவர்கள் தேடுவது தங்களுக்குத் தெரிந்த வட்டத்திற்குள்தான். அதற்கப்பால் வேறொன்றைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திப்பதற்குத் துணிவதும் இல்லை. நாம் புதிதொன்றைச் சிந்தித்தால்தான் முன்னேற முடியும். மாற்றங்களைக் காண முடியும். அதற்குத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலே மாற்றங்களைத் தரும். நமக்குத் தேவையான பயனை உண்டாக்கும். ஒரு சிறிய உதாரணம் – 1970, 0 களில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது தமிழ் இளைஞர்களில் ஒரு தரப்பினர் போராடுவதற்கென்று இயக்கங்களுக்குப் போனார்கள். இன்னொரு சாரார் புலம்பெயர்ந்து சென்றனர். இரண்டும் அன்றைய நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகள்தான். இதை அன்றைய அரசியல் கட்சிகளோ தலைவர்களோ செய்யவில்லை. இதற்கு வழிகாட்டவும் இல்லை. தமக்கு முன்னுள்ள நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கெனப் புதிதாக அன்றைய இளைஞர்கள் துணிச்சலாகச் சிந்தித்தனர். அதுதான் போராட்டமாகியது. அதுதான் பின்பு புலம்பெயர் சமூகமாகியது. ஆகவே இன்றும் அதைப்போன்ற ஒரு நிலை – ஒரு சூழலே உருவாகியுள்ளது. இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு பொருத்தமான தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் இதில் துணிவோடும் ஆற்றலோடும் செயற்பட வேண்டும். முற்றிலும் புதிதாகச் சிந்தித்தால் ஒழிய, தமிழ் அரசியலில் மாற்றத்தை உருவாக்கவே முடியாது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் காண முடியாது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கட்சி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என ஏராளம் கட்சிகள் இன்று விளைந்து போயுள்ளன. எதிர்காலத்தில் இதைப்போல இன்னும் சில கட்சிகள் உருவாகக் கூடும். அதற்கான சாத்தியங்களே உண்டு. அரசியல் நெறிமுறை தவறி, ஜனநாயக வெளி சுருங்கச் சுருங்க கட்சிகளின் பெருக்கம் அதிகரிக்கும். இப்படிப் பல கட்சிகள் பெருகியுள்ளபோதும் தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிட்டியுள்ளதா? தமிழ் மக்கள் நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றுக்குப் பரிகாரம் காணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை. ஏனென்றால், இவற்றுக்கிடையில் பெரிய வேறுபாடுகள் எதுவுமில்லை. எல்லாமே ஒரு மையத்திலிருந்து பிரிந்தவையே. அதாவது ஒரு அச்சில் வார்க்கப்பட்டவை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவை எல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவை. அதிலிருந்து கொள்கையின் அடிப்படையில், குணாம்ச வேறுபாட்டினால் பிரிந்தவை அல்ல. நடைமுறைப் பிரச்சினைகளால் பிரிந்தவை. குறிப்பாக அதிகாரப் போட்டியினால், பிளவுண்டவை. இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் ஓரளவுக்கு தீர்வு யோசனைகளால் (ஒரு நாடு இரு தேசம் என) வேறுபட்டு நிற்கிறது. அதுவும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் வேறுபடவில்லை. மற்றும்படி சம்மந்தன், சுமந்திரன் போன்றோருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்தவையே இந்தக் கட்சிகள். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் ரெலோவில் செல்வம் அடைக்கலநாதனுடன் உண்டான பிணக்கின் நிமித்தமாக வெளியேறித் தனி அணியை உருவாக்கியவர்கள். ஒப்பீட்டளவில் ஐங்கரநேசன் மட்டுமே சற்று வேறுபட்டுச் செயற்படுகிறார். யாழ்ப்பாணத்திற்குள்தான் அவர்களுடைய செயற்பாட்டு வீச்செல்லை வலுவானதாக இருந்தாலும் அதில் செயற்பாட்டுத் தன்மையைக் கொண்டிருக்கிறார். குறைந்த பட்சம் சூழலையாவது அவர் வளப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார். இதனால்தான் செல்வின் போன்றவர்கள் ஐங்கரநேசனோடு மேடைகளில் வெளிப்படையாகத் தோன்றுகிறார்கள். நான்கு மரங்களாவது சமூகத்தில் வளரட்டும் என்று. மற்றவை எல்லாமே ஒரே வாய்பாட்டைக் கொண்டவை. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவற்றின் பெயர்களில் கூட அதிகம் வித்தியாசமில்லை. சட்டென்று பார்க்கின்றவர்களுக்கு எல்லாமே ஒன்று போலத் தோன்றக் கூடியவை. அது உண்மையும்தான். “தமிழ்த் தேசியம்” என்ற சொல்லை அடைமொழியாக வைத்தால்தான் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று கருதுவதன் விளைவு இது. இது முழுமையான தந்திரமே. மக்களை மடையர்களாக்கும் அபத்தச் சிந்தனை. இவ்வளவுக்கும் இவர்களில் எவருக்கும் (எந்தக் கட்சியினருக்கும்) தாம் கருதுகின்ற – கூறுகின்ற “தமிழ்த்தேசியம்” என்பதற்கான அடிப்படைப் புரிதலோ விளக்கமோ கிடையாது. கட்சியின் பெயரில் மட்டும் விளம்பர லேபிளாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தமிழ்த்தேசியம் குறித்த சரியான புரிதல் இருந்தால், அதைப் பலப்படுத்தும் விதமாகச் செயற்பட்டிருப்பர். இப்படிப் பலவீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள். இந்தத் “தமிழ்த்தேசிய நோய்”, 2000 த்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது உருவானது. இப்பொழுது அது முற்றிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கும்போது பின்னாளில் இப்படியெல்லாம் சீரழிவுகளைச் சந்திக்க வேண்டும் என்று இதை உருவாக்கிய புலிகளும் கருதியிருக்கவில்லை. இதற்கு அனுசரணையாக இருந்தோரும் கருதவில்லை. அவர்கள் இருந்திருந்தால் தலையில் கையை வைத்திருப்பார்கள். பலருக்குத் தலையில் தீர்ப்பையே எழுதியிருக்கவும் கூடும். 1970 களில் உருவாகிய ஆயுதப்போராட்ட இயக்கங்கள் “ஈழம்”, “தமிழீழம்” என்ற சொல்லை அர்த்தபூர்வமாகவே பயன்படுத்தின. ஆனால் 1980 களில் ஏட்டிக்குப் போட்டியாக ஆளுக்கு ஒரு இயக்கம் என்று ஆரம்பிக்கப்பட்டபோது, “ஈழம்”, “தமிழீழம்” என்பதெல்லாம் ஒரு பாஷனுக்காக வைத்துக் கொண்டதைப்போலத்தான் இன்றைய தமிழ் அரசியற் கட்சிகள் “தமிழ்த்தேசியம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஆகவே, தமிழரின் வரலாறு முன்னோக்கி நகரவேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டன. விடுதலைப்புலிகளின் ஆதிக்கமில்லாமல், அது சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கி 13 ஆண்டுகளாகி விட்டன. இதுவரையில் அது என்ன செய்திருக்கிறது? இனி என்ன செய்ய உத்தேசித்துள்ளது? உருப்படியாகச் செய்தது என்றால் எட்டுப் பத்துக் கட்சிகளைக் குட்டி போட்டதுதான் மிச்சம். அதாவது எதிர்த்தரப்புக்கு வாய்ப்பைக் கொடுத்தது. இப்படித் தன்னுடன் இணைந்திருந்த தரப்புகளை உடைத்துச் சிதறடித்து பல அணிகளாக்கி விட்டு, இப்பொழுது ஒற்றைமையைப் பற்றி அது பேசுகிறது. இதைக் கேட்கும்போது முட்டாளுக்கும் சிரிப்பு வரும். ஆனால், கூட்டமைப்பின் தலைவர்கள் இதை வாய் கூசாமல் சொல்கிறார்கள். அவர்களுடைய கணிப்பில், தமிழ் மக்கள் மகா மூடர்கள் என்பதாகவே உள்ளனர். அந்த நம்பிக்கையில்தான் மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாகத் துணிச்சலாக அவர்களால் கதைக்கவும் செயற்படவும் முடிகிறது.

கூட்டமைப்பைப் போலத்தான் ஏனைய தரப்புகளும். அவற்றிடமும் எந்தப் புதினமும் இல்லை. எந்த மாற்று வழியும் கிடையாது. எத்தகைய மக்கள் நலத்திட்டங்களும் இல்லை. செயற்பாட்டுக்கான வழிமுறையோ அர்ப்பணிப்புணர்வோ கிடையாது. எல்லோரும் வெறும் வாய்ப் பேச்சு வீரர்களாகத்தான் உள்ளனர். இதனால்தான் இவர்கள் எவரையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். கேப்பாப்பிலவுப் போராட்டம், இரணைதீவுத் தரையிறக்கம், வலி வடக்கு நில மீட்புப் போராட்டங்கள், காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம், குருந்தூர் மலைப் போராட்டம் என அனைத்துப் போராட்டங்களையும் மக்கள் சுயாதீனமாக முன்னெடுக்கின்றனர். மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இந்தக் கட்சிகள் வெட்கமில்லாமல் போய் ஒட்டிக் கொள்கின்றன. அவ்வளவுதான். உண்மையில் இந்தத் தமிழ் அரசியற் கட்சிகள் செயலிழந்து விட்டன. கோட்பாட்டாலும் நடைமுறைகளாலும் இவை தோற்று விட்டன.

பாராளுமன்றத்தில் உரத்துப் பேசுவதற்கு அப்பால் இவற்றிடம் வேறு எந்தப் பொருளுமே இல்லை. முன்பொரு காலம் அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம், தளபதி அமிர்தலிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன், தந்தை செல்வநாயகம், அடங்காச் சிங்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கம் என அன்றைய தலைவர்கள் முழங்கியதைப்போல இப்பொழுது சாணக்கியன், சிறிதரன், சுமந்திரன், கஜேந்திரன்கள் முழங்குகிறார்கள். இதைக் கேட்கும்போது பலருக்கும் உடலில் புல்லரிக்கும். ரோமங்கள் சிலிர்க்கும். அவ்வளவுதான். அதற்கப்பால் இவற்றுக்கு எந்த அரசியல் பெறுமானமும் கிடையாது. ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்களின் அரசியலை முன்னெடுக்கும் விதமே வேறு. விடுதலைக்கான அரசியல் வழியே வேறு. அது நடைமுறை அரசியலோடு இணைந்தது. மக்களோடு பின்னிப் பிணைந்தது. பிரமுகர்த்தனத்துக்கு (வெள்ளை ஆடைக்கு) மாறானது. அர்ப்பணிப்பு மிக்கது. இதைப் புரிந்து கொள்ளாத வரை இப்படித்தான் தோல்வியும் பின்னடைவும் நிகழும். எனவேதான் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்புகளும் இன்று பயனற்றவை ஆகி விட்டன என்று ஆதாரபூர்வமாகவே சொல்ல வேண்டியுள்ளது. ஏன், “தமிழ் மக்கள் பேரவை என்றொரு அமைப்பு” மிக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலு டாம்பிகமாக ஆரம்பிக்கப்பட்டது. “எழுக தமிழ்” என்றொரு பிரமாண்ட எழுச்சிக் கூட்டமும் நடத்தப்பட்டது. இப்பொழுது அந்தப் பேரவை எங்கே? அந்த எழுச்சிக்கு என்ன நடந்தது?இப்பொழுது தமிழ்த்தேசியப் பேரவை என்றொரு அமைப்பு உருவாகியுள்ளது. இது எத்தனை மாதம் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. இதுபோலப் பல வரலாற்றுச் சோகங்கள் (வரலாற்று வேடிக்கைகள்) உண்டு. இதைக்குறித்த விமர்சங்களும் கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளன. இதை தனியே நான் மட்டும் சொல்லவில்லை. நானும் என்னைப் போன்ற சிலரும் இதை அழுத்தமாகச் சில ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம். அப்பொழுது பலரும் இதை முகச் சுழிப்புடன் பார்த்தனர். தங்கள் காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ஆனால், இன்று அவர்களே இதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்த்தேசியத் தரப்புகளின் பலவீனத்தை, திறனின்மையை, நேர்மையீனத்தை, அதிகார மமதையை, ஜனநாயக விரோதப்போக்கை, ஆற்றலின்மையை, அர்ப்பணிப்பற்ற தனத்தைப் பற்றிப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். முன்பு இந்தத் தரப்பினரைப் பலப்படுத்த வேண்டும் என்று கருதிய நிலாந்தன், யதீந்திரா, யோதிலிங்கம், தேவராஜ், சிவகரன், வித்தியாதரன், கே.ரி.கணேசலிங்கம், மாணிக்கவாசகம் உட்பட அனைத்துத் தரப்பினரும் போட்டு வாங்குகின்றனர். இருந்தாலும் இன்னும் இவர்களிடம் புதிய அரசியலைக்குறித்த தடுமாற்றம் – குழப்பம் உள்ளது. அதனால்தான் இவற்றையே எப்படியாவது சரிசெய்து ஓட்டலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், உக்கிப்போன இயந்திரத்தை என்னதான் செய்ய முடியும்? இதைக் கடந்து – மீறி – புதிதாகச் சிந்திக்கும் திராணி பலருக்கும் ஏற்படவில்லை. என்பதால்தான் இந்தத் துயரமும் இந்த அவலமும். அதாவது போருக்குப் பிந்திய அரசியல் என்ன? அதை எப்படி முன்னெடுப்பது? அதற்குப் பொருத்தமான தரப்பு எது அல்லது அதற்கான தரப்புகள் எவை என்பதைக்குறித்த ஆய்வோ, அவதானமே இவர்களிடம் ஏற்படவில்லை. இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டும். பகிரங்கமாக உரையாட வேண்டும். இல்லையென்றால் வரலாறு இந்தக் கட்சிகளைக் கழித்து விடுவதைப்போல இதனோடு இணைந்திருப்போரையும் கழித்து விடும். அதற்குத் துணிச்சல் வேண்டும். அறிவு என்பது துணிச்சலை அடிப்படையாகக் கொண்டது. துணிச்சல் இல்லாத அறிவினால் பிரயோசனம் ஏதுமில்லை. சோக்கிரட்டீஸ், புருனே போன்றோர் மட்டுமல்ல இன்றைய காலத்தின் அறிஞர்களான நொம் சோம்ஸ்கி, எட்வெட் ஸெய்த், அய்யாஸ் அஹ்மத் போன்ற அனைவருமே துணிச்சலை அடிப்படையாகக் கொண்டவர்கள். அதாவது மக்களுக்கான அறிஞர்கள் (Public Intellectuals) எனக் கருதப்படுகிறார்கள். அப்படி மக்களுக்கான அறிஞர்களாகச் செயற்பட முற்படும்போது சாதி, பிரதேசம், பால், இனம், மொழி, கட்சி போன்றவற்றின் நெருக்கடி நேரடியாக எழும். இந்தத் தரப்புகளின் முகச் சுழிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஏன், சிலவேளை என்ற பெயரைக் கூட ஏற்க வேண்டியிருக்கும். ஆனால் துணிவோடு சாதி, பிரதேசம், பால், இனம், மொழி, கட்சி போன்றவற்றுக்கு அப்பால் எழுந்தால் இந்தச் சிறிய எல்லைகள் தகர்ந்து விடும். உலகளாவிய பெரும் வெளியில் ஒளிகொண்ட சிந்தனை மேலோங்கும். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிகளைப் பற்றிய மெய்யான சிந்தனைக்கு வழியைத் தரும். அதற்கான நடைமுறைகளை உருவாக்கும். நம்முடைய சமூக விடுதலை என்பது தனியே நம்முடைய வட்டத்துக்குள் அமைவதில்லை. அதற்குள் தீர்மானிக்கப்படுவதும் இல்லை. அது பெரிய வலைப்பின்னலில் ஒரு கண்ணியாகும். ஒரு காலம் சுதந்திரன் பத்திரிகையும் அதனோடிணைந்த கோவை மகேசன், காசி ஆனந்தன் போன்றோரும் மிகப் புகழோடிருந்த வரலாறுண்டு. பின்னர் அதெல்லாம் நகைப்பிற்கிடமாகி விட்டது. காரணம், அவர்களுடைய எல்லை மிகக் குறுகியதாக இருந்தது. அதைப்போன்ற ஒரு வரலாற்றுச் சூழல் திரும்பவும் இன்று வந்துள்ளது. குறுகிய சந்துக்குள் நின்று கூக்குரலிடுவதா? விரிந்த வெளியில் சிறகை விரிப்பதா? என்று சிந்திக்க வேண்டிய காலம். ஆகவே இதைப் புரிந்து கொண்டு செயற்படுவதே காலத்தின் விதியாகும். அரசியற் தரப்புகள் அதிகாரம், நலன் என தமது நலன்சார்ந்து செயற்படுகின்றவை என்பதால் அவற்றிடம் மாற்றங்கள் எதையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஆனால், அறிவுத்துறையில், ஊடகத்துறையில் இயங்குவோரும் அப்படிச் செயற்பட முற்படக் கூடாது. அது வரலாற்றுக்கு இழுக்காகி விடும். இதைத் தவிர வேறு எதை நான் அவர்களுக்குக் கூற முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்