தேர்தல் காலத்தில்  இனிப்புப் பண்டங்கள் போன்று  அல்லி வீசும் வாக்குறுதிகள் 

தேர்தல் வந்து விட்டால், கலையாடிகளும் குறி சொல்லிகளும் உற்சாகமாகி விடுவார்கள். பல சந்தர்ப்பங்களிலும் இவர்களுடைய கலையாட்டமும் குறி சொல்லுதலும் பிழைத்து விடுவதுண்டு. ஆனாலும் தங்கள் தோல்வியையும் தவறுகளையுமிட்டு இவர்கள் வெட்கப்படுவதில்லை. இதனால் இந்தக் குறிசொல்லுதல் என்பது விக்கிரமாதித்தனின் வேதாளத்தைப்போல திரும்பத்திரும்ப முருங்கையிலேயே ஏற முயற்சிக்கும்.

இதுவொரு கொஸிப்பு. பூராயம். விண்ணாணம், விடுப்பு…

சனங்களுக்கும் தேர்தல் காலத்தில் இதுவொரு இனிப்புப் பண்டம். என்பதால் இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலும் இவர்களுடைய அமர்க்களம் தொடங்கியுள்ளது.

ஆனால், இதுவொரு மனோவியாதி என்பது பலருக்கும் தெரிவதில்லை. சனங்களை அரசியல் விவாதங்களில் ஈடுபடுத்துவது, அரசியல் ரீதியாக வளர்த்தெடுப்பது, அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்துவது என்பது வேறு. இது வேறு.

இது தங்கள் விருப்பங்களையும் குழப்பங்களையும் சனங்களின் தலைமேலே ஏற்றி விடுவதாகும். இந்தத் தவறினால்தான் தமிழரின் அரசியல் தெரிவுகள் சரியான திசையை நோக்கிச் செல்வதில்லை. இதன் விளைவையே இன்று தமிழ்ச் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ற போதும் இந்த வேதாளங்கள் இன்னும் இதைப் புரிந்து கொண்டு தெளிய முற்படவில்லை என்பது பெரும்சோகம்.

இப்போது நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கும்? அதிலே யார் யாரெல்லாம் வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள்? யார் தோல்வியைத் தழுவுவர் என்று இந்தக் கணிப்பு (ஊக) வரைபடத்தை வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்ச் சனங்களோ பெருங்குழப்பத்தில் சிக்குண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது? யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாத தடுமாற்றம் பலரையும் ஆட்கொண்டிருக்கிறது.

இதே நிலை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஏற்பட்டிருந்தது பலருக்கும் நினைவிருக்கும். இதற்குக் காரணம், தமிழ்ச்சமூகத்தின் அரசியல் வழிமுறை, அரசியல் சிந்தனை ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியும் தடுமாற்றங்களுமே. குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நீண்டதூரப் பார்வையற்ற அரசியல் தவறுகளே இந்த இக்கட்டான நிலைக்குக்காரணமாகும். இதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

எனவேதான் கடந்த காலத்தைப்போல ஓரணியாக நிற்போம், ஒற்றுமையைப் பலப்படுத்துவோம் என்று சொல்வதற்கு இப்பொழுது யாரிடத்திலும் துணிவில்லை.

ஓரணியாக நின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது உடைந்து ஏழு, எட்டுத் துண்டுகளாகி விட்டது. கூட்டமைப்புப் போட்ட குட்டிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் கூட்டமைப்பையே எதிர்த்து நிற்கின்றன.

எனவே ஒற்றுமை, ஓரணி என்பதெல்லாம் இன்று சாத்தியமில்லை என்றாகி விட்டது. இதை மீறி இன்னும் ஒற்றுமை, ஓரணி என்று யாராவது  சொன்னால் அது சிரிப்பாகி விடும். இதனால் இன்னாருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கை நீட்டிக் காட்டுவதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மத அமைப்புகளுக்கும் சில ஊடகங்களுக்கும் வாய்ப்பற்றுப் போய் விட்டது. சனங்களும் யாருடைய கதைகளையும் கேட்கும் நிலைப்பாட்டில் இல்லை. ஓரணியாக நின்றும் ஒற்றுமையாக வாக்களித்தும் கண்ட பயன் ஏதுமில்லை. பதிலாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே மக்கள் எண்ணுகிறார்கள்.

கடந்த தேர்தல்களின்போது மக்கள் எப்படிச் செயற்பட வேண்டும்? யாரை ஆதரிக்க வேண்டும்? எதற்காக ஆதரிக்க வேண்டும்? ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும்? என்ற நியாயங்களைச்  சொன்னவர்கள் எல்லாம் பின்னர் கூட்டமைப்பின் தவறுகளைக் கண்டிக்கவில்லை. அது தவறிழைப்பதைத் தடுக்கவில்லை. அதை மக்களை நோக்கிக் கொண்டு வரவில்லை. அதன் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தவில்லை. அதை வழிப்படுத்தவில்லை என்ற கோபம் பெருமளவுக்கும் மக்களுக்குண்டு. இதனையே இப்போது சனங்கள் பெரும்பாலான இடங்களிலும் அதிருப்தியாகவும் கோபமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்பதால்தான் இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது? எந்தத் தரப்பை வெற்றியடையச் செய்வது? அல்லது நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தனித்தனியாக தெரிவுகளைச் செய்யலாமா என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அதாவது மக்கள் வேறுவிதமாகச் சிந்திக்க முற்படுகிறார்கள்.

அப்படியென்றால் தமிழரின் அரசியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

இவ்வாறான நெருக்கடிகளே எப்போதும் புதிய தளங்களைக் கண்டறியச் செய்யும். புதிய வழிகளைத் தேடவைக்கும். அப்படிப் புதிய வழியைத் தேடுவதற்கே சனங்கள் முற்படுகின்றனர். சனங்களுடைய புதிய தெரிவென்பது, தனித்து நிற்பது, கூட்டாக நிற்பது என்பதைப் பொறுத்ததல்ல. தனித்துவமாக நிற்பது யார்? அது எந்தத் தரப்பு என்பதாகவே உள்ளது.

அதாவது பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை (Powerless Peoples) பலமான மக்களாக (Powerfull Peoples) மாற்றக்கூடிய தரப்பையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது போருக்குப் பிந்திய அல்லது பின்போர்க்கால (Postwar Politics) அரசியலை முன்னெடுப்பது யார் என்று.

இன்று தமிழ்ச்சமூகம் கல்வி, பொருளாதாரம், பண்பாடு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு, நில வளம் போன்ற எல்லாவற்றிலும் வீழ்ச்சியையே கண்டிருக்கிறது. இவற்றை மீள் நிலைப்படுத்தவும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லவும் வேண்டியுள்ளது. எனவேதான் இதற்கான தலைமையை, இதைச் செய்யக் கூடிய தரப்புகளை மக்கள் தேடுகிறார்கள். தேர்வு செய்ய முற்படுகிறார்கள்.

ஆனால், இதை மறுதலிப்பதற்கே ஊடகங்களும் ஆய்வாளர்களும் முயற்சிக்கின்றனர். அதாவது சனங்களின் தேவை, அவர்களுடைய விருப்பம், சமூக யதார்த்தம் என்பவற்றுக்கு எதிராகச் செயற்பட முனைகிறார்கள். பலவீனப்பட்டுப்போயிருக்கும் சமூகத்தின் நிலைமையைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் வரட்டுப் பழமைவாதத்தில் ஊறிப்போய்க்கிடக்கின்றனர் இவர்கள். இந்த ஊடகங்களும் இந்தப் பேர்வழிகளும் கால மாற்றத்தையும் சமூக நிலைமையையும் கணக்கில் கொள்ளவில்லை. இவர்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் போருக்கு முந்திய அரசியலை அல்லது போர்க்கால அரசியலையே. அது முடிந்து போன ஒன்று. காலம் கடந்த ஒன்று. உதாரணமாக விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் போருக்கு முந்திய அரசியலையே முன்னெடுக்கின்றன. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக – பின்னூட்டமாக மட்டுமே இவை இரண்டும் போருடன் தொடர்பட்ட (போர்க்குற்றத்துக்கான விசாரணை உள்ளிட்ட) விடயங்களைக் கையாள முற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட சனங்களுக்குமான நியாயத்தையும் நீதியையும் கோருவது வேறு. அதைப் பெறுவதற்கான வழிகளை நாடுவது வேறு. இதற்கு எதிரான நிலையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது வேறு. இந்தக் குழப்பங்களே இந்தத் தரப்புகளின் பலவீனமும் தவறுமாகும். இவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தவறுகளிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்வதற்குப் பதிலாக அதற்குண்டாகியிருக்கும் வீழ்ச்சியைப் பயன்படுத்தித் தமக்கான அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்யவே முயற்சிக்கின்றன.

இது காலப்பொருத்தமும் யதார்த்தமும் இல்லாத ஒன்று. தவறான வழிமுறை. வரலாற்றிலிருந்தும் யதார்த்த நிலையிலிருந்தும் கற்றுக் கொள்ளாத நிலை. இந்த நிலையிலிருந்து கொண்டு தொடர்ந்தும் சனங்களைத் தவறான திசையை நோக்கிச் செலுத்த முற்படுவதென்பது ஒருவகையில் பலவந்தப்படுத்தலேயாகும். பலவந்தப்படுத்தல் என்பது அதிகாரம், அநீதியோடு இணைந்தது. ஜனநாயக விரோதமாகும்.

எனவே சனங்களோடிருப்போரும் சனங்களைக் குறித்துச் சிந்திப்போரும் இவற்றைக்குறித்துக் கவனமெடுக்க வேண்டும். இது வரலாற்றுக் கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இதற்கு உரிய விவாதங்களை நாம் முன்வைக்க வேண்டும். முதலில் தமிழரின் அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கியது யார்?  தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரத்தையும் வாய்ப்புகளையும் பாழாக்கியது யார்?

ஒற்றுமையைச் சிதறடித்தோடு ஒற்றுமைக்கு எதிராகவே நிற்பது யார்?

விடுதலை அரசியலைச் சிதறித்தது, சிதறடிப்பது, அதற்கு எதிராகச் செயற்படுவது யார்? போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதும் கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பதும் யார்?

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நிலைக்குள்ளாக்கியது யார்?

தொடர்ந்தும் அரசியல் தவறுகளைச் செய்து கொண்டிருப்பது யார்? சிங்கள மேலாதிக்க ஆட்சியினருக்கு வாய்ப்பான சூழல்களை உருவாக்கிக் கொண்டிருப்பது யார்? அவர்களுடைய நோக்கத்துக்கு மக்களைப் பலியிடுவது யார்? சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளையும் ஆதரவையும் பாழாக்கிக் கொண்டிருப்பது யார்? போன்ற கேள்விகளை முன்னிறுத்தி நாம் விவாதிக்க வேண்டும். இதற்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும்..

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்வதில் கூட்டமைப்புக்கிருக்கும் பொறுப்பின் அளவு அதனை ஆதரித்து நின்றோருக்கும் உண்டு. கூட்டமைப்பை விட்டு இன்று வெளியேறியோருக்கும் இதில் பொறுப்புண்டு. அவர்களும் ஒரு கட்டம் வரையில் இந்த ஆடுகளத்தில் நின்றாடியவர்களே. ஆகவே இந்தப் பொறுப்பை – இந்தத் தவறை இவர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தமிழ்மக்கள் தங்களுடைய ஆணையையும் அதிகாரத்தையும் ஒரே தரப்புக்கு வழங்கியும் அதன் மூலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம் என்ன என்பதையும் நாம் காண  வேண்டியுள்ளது. இதற்குத் தனியே கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தை மட்டும் காரணம் என்று குற்றம் சாட்டி விட முடியாது. அப்படிச் சொல்லி விட்டு ஏனையோர் அதே தவறுகளைச் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதால் பயனில்லை.

தமிழ் மக்களின் ஒற்றுமை உணர்த்திய சேதி, ஓரணியில் நின்று

வெளிப்படுத்திய விடயங்கள் என்ன என்பதே இன்று முக்கியமானது.

போருக்குப் பிந்திய அரசியலை நோக்கித் தமிழ்ச்சமூகம் சிந்திக்கவில்லை. இலங்கையின் உள்நாட்டு நிலவரம், பல்லின நாடொன்றின் அரசியல் சமூக யதார்த்தம் போன்றவற்றை அது உணரவில்லை. போருக்குப் பிந்திய சமூக யதார்த்தம், அரசியல் நிலை, பிராந்திய, மேற்குலக, சர்வதேச ஊடாட்டங்களும் அசைவுகளும் எப்படியுள்ளன என்பதைப் பற்றிய புரிதலையும் அவதானத்தையும் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கவில்லை.

இதுதான் தமிழ்ச்சமூகத்தின் அரசியலும் சமூக இருப்பும் பலவீனப்பட்டதற்குப் பிரதான காரணமாகியது. இந்தத் தவறை உணரத் தவறி விட்டது என்ற அளவில் கூட்டமைப்பின் தலைமை மீது கண்டனமும் விமர்சனமும் இருக்கலாம். மற்றும்படி கூட்டமைப்பிற்கும் ஏனைய தரப்புக்குமிடையில் எந்தப் பெரிய வேறுபாடுமில்லை. ஒரு நண்பர் சொன்னதைப்போல ஒன்று மோதகம் என்றால் மற்றது கொழுக்கட்டை. அடுத்தது, சூசியம். அவ்வளவுதான். இவற்றில் எதைத் தேர்வு செய்தாலும் விளைவு ஒன்றே.

எனவே இந்த நிலையிலிருந்து நிச்சயமாக மாற்றம் வேண்டியதாக இருக்கிறது. அந்த மாற்றத்துக்கு மாற்று அரசியல் தேவை. அந்த மாற்று அரசியலுக்கு மாற்றுச் சிந்தனை வேண்டும். அந்த மாற்றுச் சிந்தனை மக்கள் நிலையிலிருந்து சிந்திக்கப்படுவதாக இருக்க வேண்டும். அதாவது மக்கள் வெற்றியடைக் கூடிய சிந்தனை. மக்கள் பலமடையக் கூடிய (Powerfull Peoples) சிந்தனை அது.

இதற்கு தேவையாக இருப்பது, முதலில் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் தலைக்குள்ளே நிரப்பி வைத்திருக்கும் கற்பிதங்களையும் முன்முடிவுகளையும் நீக்கி விட்டு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

யதார்த்தம் என்பதும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் எப்போதும் கடினமானதே. என்பதால்தான் அது கசப்பானதாக இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மையும் உண்மைக்கு நெருக்கமானதுமாகும். ஆகவே அதை எதிர்கொண்டே தீர வேண்டும்.

நமக்கு மாபெரும் கனவுகளும் மறுக்க முடியாத நியாயங்களும் இருக்கலாம். அதில் தவறில்லை.

ஆனால், உலக நடைமுறை என்பது இன்னொன்று. அந்த உலக நடைமுறையையும் நமது கனவையும் ஒருங்கிணைப்பதில்தான் நமது சாமர்த்தியமும் நமக்கான வெற்றியும் தங்கியுள்ளது.

இந்த இரண்டுக்கும் இடையில் சமனிலையைக் காண்பதே அறிவும் நுட்பமும் திறனும்.

இதைச் செய்யும்போதே – இப்படிச் செயற்படும்போதே தமிழ்ச் சமூகம் பலமான தரப்பாக (Powerfull Community யாக) மாற முடியும். இல்லையென்றால் பலவீனமான சமூகமாக (Powerless community யாக) இருக்க வேண்டியதுதான். இதை இன்னும் புரியாத மாதிரித் தமிழ்ச்சமூகம் இருப்பதுதான் வேதனை. இதுவே பெருந்தோல்விக்கான அடித்தளமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்