தேன்மொழி சௌந்தரராஜன் விஷயத்தில் கூகுள் நிறுவனம் சாதி பார்க்கிறது

கடும் எதிர்ப்பு காரணமாக தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தரராஜனின் கூகுள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தரராஜன். தலித் வரலாறு தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்திப்பிரிவு ஊழியர்களிடம் உரையாடுவதற்காக தேன்மொழி செளந்தரராஜன் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தேன்மொழி செளந்தரராஜன் இந்து விரோதி என்றும், இந்து மதத்திற்கு எதிராக கருத்து பரப்பி வருபவர் எனக் குற்றம்சாட்டி அவரது நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேன்மொழியின் சமத்துவ ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனத்திற்குள் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சைக்கு தேன்மொழி செளந்தரராஜன் கடிதம் எழுதியதாகவும், எனினும் எத்தகைய முன்னெடுப்பு கூகுள் நிறுவனம் சார்பாக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் எந்தவிதமான சாதிய வேற்றுமைகளுக்கும் இடமில்லை” எனத் தெரிவித்துள்ளது. இவற்றுக்கு மத்தியில் தேன்மொழி செளந்தரராஜனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேச அழைப்பு விடுத்திருந்த கூகுள் செய்திப்பிரிவின் முதன்மை மேலாளர் தனுஜா குப்தா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்