தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் வரலாறு படைத்த வவுனியா மாவட்ட பம்பைமடு வரோத் கழகம்

இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவினால் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் கனிஷ்ட பெண்கள் பிரிவில் வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு, வரோத் கழகம் சம்பியன் பட்டத்தை சூடி வரலாறு படைத்தது. அத்துடன் வரோத் கழகத்தைச் சேர்ந்த காளிமுத்து கயல்விழி பெண்களுக்கான கனிஷ்ட பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுநராக தெரிவானார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வன்னி புனர்வாழ்பு ஸ்தாபனமே சுருக்கமாக வரோத் என அழைக்கப்படுகின்றது. இலங்கை பரா மெய்வல்லுநர் வரலாற்றில் முதல் தடவையாக ஈட்டப்பட்ட இந்த வெற்றிகளையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தவரோத்   விளையாட்டுக் கழகத் தலைவர் சவரிமுத்து விக்டர், எங்களுக்கு சிறந்த பயிற்றுநர்கள் கிடைத்தால் எமது மாற்றுத்திறனாளிகள் இதனைவிட சாதிப்பார்கள் என நம்புவதாக குறிப்பிட்டார்.

தேசிய பரா மெய்வல்லநர் போட்டியில் முதல் முறையாக பெண்களுக்கான கனிஷ்ட பிரிவில் எமது கழகம் சம்பியனாகியுள்ளது. அத்துடன் எமது மாற்றுத்திறனாளி ஒருவர் கனிஷ்ட பெண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுநராக தெரிவாகியுள்ளார். இவை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. அத்துடன் எமது மாற்றுத்திறனாளிகளில் 12 பேர் பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த வெற்றிகளின் மூலம் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளதுடன் இன்னும் வளர்ச்சி அடைய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

எமது கழகம் முன்னேற்றம் அடைவதற்கு நிறைய சவால்களை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக எங்கள் கழகத்திலிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுநர்கள் போதிய அளவு இல்லை. தரச் சான்றிதழ்களைக் கொண்ட சிறந்த பயிற்றுநர்கள் எங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது மாற்றுத்திறனாளிகள் சிறப்பான பயிற்சிகளைப் பெற்று இதனைவிட அதிகமான வெற்றிகளை ஈட்டுவதற்கு சந்தர்ப்பம் உருவாகும் என நம்புகிறேன். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தால் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும்’ என்றார் அவர்.

இதேவேளை, இவ் வருடப் போட்டியில் பங்குபற்ற  தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிய தேசிய பராலிம்பிக் குழுவினருக்கும்  தங்களது வரோத் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை வின்சன்ட் டி போல் குரூஸ் சிஎம்எஸ் அடிகளாருக்கும் கழகத் தலைவர் என்ற வகையில் நன்றி கூறுவதாக சவரிமுத்து விக்டர் குறிப்பிட்டார்.

வரோத் கழகத்துக்கு 4 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் தேசிய பரா மெய்வல்லநர் போட்டியில் வரோத் கழகம் சார்பாக பங்குபற்றிய 29 மாற்றுத்திறனாளிகளில் 12 பேர் 4 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை தங்களிடையே பகிர்ந்துகொண்டனர். பெண்களுக்கான ரி20 பிரிவில் போட்டியிட்ட காளிமுத்து கயல்விழி 2 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

அவர் 100 மீற்றர், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார். ஆண்களுக்கான ரி20  பிரிவில்   முகம்மது அஸ்வர் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் ரி38 பிரிவில் சுப்பிரமணியம் நிர்மலன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

ஆண்களுக்கான ரி44 பிரிவில் சிவகுமார் திசோன், தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான ரி53, 54 பிரிவில் ராசேந்திரம் சரோஜினி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான ரி44 பிரிவில் குமரமூர்த்தி தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

பெண்களுக்கான ரி20 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ராஜகோபால் வேணுஜா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

வெண்கலம் வென்றவர்கள்

பெண்களுக்கான ரி20 பிரிவு 400 மீற்றர் – சந்திரகுமார் சந்திரகுமாரி. ஆண்களுக்கான ரி20 பிரிவு 400 மீற்றர் – சந்திரகுமார் தேஸ்காந்த். ஆண்களுக்கான  ரி 54 பிரிவு 1,500 மீற்றர் – செல்வராஜா ஜெகதீஸ்வரன். ஆண்களுக்கான ரி20 பிரிவு 1,500 மீற்றர் – தர்மகுலசிங்கம் திருமாறன் ஆண்களுக்கான ரி47 பிரிவு 400 மீற்றர் – தங்கையா பவீந்திரன்.

தேசிய பராலிம்பிக் குழு தலைவர் பாராட்டு இந்த வருட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றியவர்களின் பெறுபேறுகளில் முன்னேற்றத்தை காணக்கூடிய இருந்ததாகவும் வட பகுதி மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்கள் பாராட்டத்தக்க வகையில் இருந்ததாகவும் தேசிய பராலிம்பிக் குழுத் தலைவர் கேர்ணல் தீபால் ஹேரத் தெரிவித்தார். இவ் வருடம் பங்குபற்றிய மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல் வெளிப்பாடுகளில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக சமித்த துலான் ஈட்டி எறிதலில் உலக சாதனையைவிட அதிசிறந்த தூரப்பெறுதியைப் பதிவு செய்தார். அவர் பதிவு செய்துள்ள 66.60 மீற்றர் தூரம் உலக சாதனைக்கான அங்கீகாரத்துக்காக சர்வதேச பராலிம்பிக் குழு மற்றும் உலக பரா மெய்வல்லுநர் சங்கம் ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் பரா மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கழகம் (வவுனியா வரோத் கழகம்) ஒன்று கனிஷ்ட பிரிவில் சம்பியனானதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தப் பெறுபேறுகளின் மூலம் எதிர்காலத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் பங்குபற்ற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்’ என்றார். தேசிய பரா மெய்வல்லநர் போட்டிகளுக்கு டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்