தென்னாபிரிக்கா – இங்கிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு!

கேப்டவுனில் இன்று நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்றிருந்தது.

அதனையடுத்து மூன்று போட்டிகளடங்கிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டியே தென்னாபிரிக்க குழாமிலிருந்த வீரரொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தென்னாபிரிக்காவின் இரண்டு வீரர்கள் தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இப்போது மூன்றாவதாக ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இன்று மாலையில் அனைத்து வீரர்களும் மீண்டுமொருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதனடிப்படையில் மேற்கொண்டு முடிவெடுக்கவுள்ளதாகவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 10ஆம் திகதி இங்கிலாந்து அணி நாடு திரும்பவுள்ள நிலையில், இந்தத் தொடரை மேலும் சில தினங்கள் தாமதித்து நடாத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுமானால் அதனை இரத்துச் செய்யும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்