
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஆண்கள் இருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லேரியா
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது பலத்த காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதுடைய அம்பத்தலே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடுகன்னாவ
கடுகன்னவா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மிவல, மெனிக் தெவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய ரத்மில, மெனிக்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என்றும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குளியாபிட்டிய
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிடதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தாள் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட தனது நண்பர்களுடன் இடம்பெற்ற முரண்பாடு மோதலாக உக்கிரமடைந்த நிலையில் நண்பர்களினால் குறித்த நபர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய பிடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்றும் சந்தேக நபர்கள் மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.