துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய விராத் கோஹ்லிக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட 18 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் விராத் கோஹ்லிக்கு இடம்கிடைக்கவில்லை.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் மிக நீண்டகாலமாக பிரகாசிக்கத் தவறிவந்துள்ள இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் விராத் கோஹ்லி, 2019க்குப் பின்னர் ஒரு சதத்தையேனும் பெறவில்லை.

இந்தியாவில் தற்போது அதிரடி துடுப்பாட்டக்காரர்கள் தாராளமாக இருப்பதால் விராத் கோஹ்லியின் எதிர்காலம் தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அணியிலிருந்து முன்வரிசை துடுப்பாட்ட வீரர் விராத் கோஹ்லி நீக்கப்பட்டுள்ளாரா அல்லது உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தேர்வாளர்கள் எதுவும் கூறவில்லை.

பிரதான சுழல்பந்துவிச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஷ்வின், ஆரம்ப வீரர் கே.எல். ராகுல், மற்றொரு சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இறுதி அணியில் தங்களது இருப்பை உறுதிசெய்ய உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டியன் பிறீமியர் லீக்கில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய புதிய நட்சத்திரங்கள் பலர் இந்திய குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் டரவ்பாவில் ஜூலை 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த 2 போட்டிகள் பசட்டரே விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் திகதிகளிலும் கடைசி 2 போட்டிகள் லோடர்ஹில் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

இந்திய குழாம் ரோஹித் ஷர்மா (தலைவர்), இஷான் கிஷான், கே.எல். ராகுல், சூரியகுமார் யாதவ், தீப்பக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவ்ணேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷால் பட்டேல், அர்ஷ்தீப் சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்