தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்ய உதவியை நாடியது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்யா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை வீழ்த்தி தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் 15க்கும் மேற்பட்டோர் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். இதனால், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இதுவரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் மண்ணை ஐஎஸ்ஐஎஸ் கோராசன் போன்ற சில தீவிரவாத அமைப்புகள் தங்களின் பலத்தை வளர்க்கப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது. மேலும், ஆப்கன் மண்ணை தீவிரவாதிகள் அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான தாக்குதல் செயல்களுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
உள்நாட்டிலேயே ஐஎஸ் பிரிவினரின் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்துவதால் நங்கர்ஹர், ஜலாலாபாத் போன்ற பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்கள் நடக்காமல் தடுப்பதற்காக ரஷ்ய படைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா அந்நாட்டுடன் ஆலோசித்து வருகிறது.
ரஷ்யாவுடன் மட்டுமல்லாமல் மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற நாடுகளுடனும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமாண்டின் கமாண்டர் கென்னத் மெக்கன்ஸி மத்திய ஆசிய நாடுகளுடன் விரிவாக ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் போது ஒருவேளை மத்திய ஆசிய நாடுகள், தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களைத் தடுக்க அனுமதியளித்தால், என்ன மாதிரியான ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப்படும் என்பதை வரை ஆலோசித்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனும் சரி, சென்ட்காம் என்றழைக்கப்படும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் பிரிவும் சரி, இது தொடர்பான செய்திகள் குறித்து தொடர்ந்து மவுனம் காக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்