தீர்வென்ன? ரணில் கடவுளா மாயாவியா? கருணாகரனின் கட்டுரை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களில் மூன்று தடவை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

சொந்தச் சகோதரர்கள் என்றும் பார்க்காமல், நெருக்கடிக்குக்
காரணமானவர்கள் என்று கருதப்படும் ராஜபக்ஸவினரை அமைச்சரவையிலிருந்து வெட்டியெறிந்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ. அப்படியான நிர்ப்பந்தம் அவருக்கு. அவரையே வீட்டுக்குப் போகச்சொல்லி மக்கள் போராடிக்
கொண்டிருக்கிறார்களே! பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ வீட்டுக்கு மட்டுமல்ல, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் போராட்டத்தை அடக்க முற்பட்டபோது உருவாகிய நிலைமையினால், ஆளும் தரப்பினருடைய ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகள், சொத்துகள் எல்லாம் தீயில் அழிந்தன. ஆளும் தரப்பிலிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மட்டுமல்ல, கிராம மட்டத்திலிருந்த ஆதரவாளர்களே ஓடி ஒளித்தனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ தப்பியோடி திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில்
தஞ்சமடைந்திருந்தார். நாடே புரட்சிக்குள்ளாகியதைப்போல மே 09, 10 ஆம் தேதிகளிருந்தன.

இதற்குப் பிறகு அவசர அவசரமாக மகிந்த ராஜபக்ஸ  விலகி, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ரணில் விக்கிரமசிங்கவோ, அவருடைய ஐ.தே.கவோ,
ராஜபக்ஸக்களோ, இலங்கை மக்களோ, ஏன் உலகமே எதிர்பார்த்திராத ஆச்சரியம் இது.
இப்பொழுது ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக
– நின்று ஆட்சி அமைத்திருக்கிறார் ரணில். அதிக வாக்குகளைப் பெற்றவர்களும்
அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளும் வெளியே எதுவும் செய்ய
முடியாதிருக்கும்போது இந்த ஒற்றை ஆள் தனித்துக் களமிறங்கியிருக்கிறார்.
இந்தத் துணிச்சலுக்காக ரணிலைப் பாராட்ட வேண்டும். ஆனால், இது அரசியல்
அடிப்படையையும் ஜனநாயகத்தையும் கூடக் கேலியாக்கியுள்ளது எனப் பலரும்
விமர்சனங்களைச் செய்கிறார்கள். இருந்தாலும்  மாற்று வழி – வேறு
தெரிவுகளில்லை என்பதே உண்மை நிலை.

கடந்த தேர்தலில் ரணில் தோற்றார். அவருடைய ஐ.தே. கட்சியும் தோற்றது.
விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு
ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்று நீண்டகாலமாக இழுப்பட்ட பிறகே ரணில்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். அப்படி இருந்தவருக்கு அடித்தது
இப்படியொரு திடீர் அதிர்ஸ்டம். இதற்கான வாய்ப்பைக் கொடுத்தது
ராஜபக்ஸக்களின் தவறுகளே. அடுத்தது எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்.

ரணில் பொறுப்பேற்றதும் எல்லாமே சீராகி விடும் என்று பலரும்
எதிர்பார்த்தனர். காரணம், ரணிலின் பின்னால் இந்தியாவும் மேற்குலகும் –
குறிப்பாக அமெரிக்காவும் உள்ளன என்பதே. (இதை அந்தந்த நாடுகளின்
தூதுவர்கள் அவசர அவசரமாக மறுத்துள்ளனர் என்பது வேறு விசயம்). இந்தக்
கூட்டாளிகளும் இவர்களுக்கு இணக்கமான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்
போன்றனவும் ரணிலைக் காப்பாற்றும். அதன்வழியே நாட்டில் ஏற்பட்டுள்ள
நெருக்கடிகள் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் நெருக்கடிகள் குறையவில்லை. கோதுமை மாவின் விலை மேலும்
அதிகரித்துள்ளது. பேருந்துக் கட்டணம் ஏறியுள்ளது. எரிபொருள், சமையல்
எரிவாயு, மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பால் மா போன்றவை
மட்டுமல்ல, குழந்தைகளுக்கான பிஸ்கட், சொக்லேட் கூட இல்லை என்றான நிலை.
எரிபொருள் பற்றாக்குறையினால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வரவர நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது.
எதிர்பார்க்கப்பட்டவற்றுக்கு மாறாகவே நிலைமை விபரீதமாகப்
போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு புதிய பிரதமர் கடந்த வாரம் ஆற்றிய
உரையில், “தன்னால் உண்மைகளை மறைக்க முடியாது. அடுத்து வரும் மாதங்கள்
மிகக் கடுமையானவையாக இருக்கும். அதை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக
வேண்டும்.  உயிரைப் பணயம் வைத்தே இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். நாடு
மிக மிக நெருக்கடியான சூழலில் இருப்பதால் அதைப் பொறுப்பெடுத்துத் தன்னால்
முடிந்ததைச் செய்யத் துணிந்தேன். கையிருப்பில் டொலர் இல்லை. அதனால்
பொருட்களை இறக்க முடியாது. பொருட்களுடன் கடலில் தரித்து நிற்கும் கப்பலை
துறைமுகத்துக்குள் அழைக்க முடியாதிருக்கிறது” என்றார்.

இது “பானம் ஒன்றுதான். குவளையை மாற்றுவதால் பயனில்லை” என்ற பழைய உண்மையை
மீளவும் நிரூபித்துள்ளது. ஆனாலும் இதை மறைப்பதற்கே விக்கிரமசிங்க
முயற்சிக்கிறார். “யாரும் பொறுப்பெடுக்கத் துணியாதபோதே நாட்டுக்காக
இந்தச் சூழலில் ஆட்சியைப் பொறுப்பெடுத்தேன். கீழே பாதாளம் அபாயக்
கண்ணாடியின் ஊடே தெரிகிறது” என்று சொல்லியிருப்பது தன்னைத் தற்காத்துக்
கொள்ள முற்படுகிறார். இதன் மூலம் அவர் தன்னையொரு மாபெரும், வீரராக,
தியாகியாக  காட்ட முற்படுகிறார்.

என்னதான் நடந்தாலும் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவும் முடியாது
வைத்திருக்கவும் முடியாது என்ற நிலையில் ராஜபக்ஸக்களும் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளும் உள்ளன. மக்களும் உள்ளனர். அவருடைய அமைச்சரவையில்
இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப்போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச்
சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள்,
எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப்போகின்றவர்களும்
கூட எதிர்த்திசையில் நிற்பவர்களே.

ரணிலை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, கோத்தபாய ராஜபக்ஸவை
எதிர்க்கின்றவர்களும் அவருக்கு முன்னால் நின்று அமைச்சர்களாகப் பதவிப்
பிரமாணம் செய்துள்ளனர்.

எவராலும் எதுவுமே செய்ய முடியாது. எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள
வேண்டும் என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. அப்படியான
ஒரு வரலாற்றுச்  சூழல் உருவாகி எல்லோரையும் வாட்டியெடுக்கிறது. ஆனாலும்
சரியோ தவறோ ரணிலை ஆதரியுங்கள் என்றே பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும்
கேட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேசச் செல்வாக்கும் அனுபவமும் மிக்க தலைவர்தான்.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டு கால அனுபவம் உள்ளவர். ஐந்து தடவைக்கு மேல்
பிரமராக இருந்தவர். நெருக்கடிகளின் மத்தியில் எதிர்த்தரப்பிலுள்ள நான்கு
ஜனாதிபதிகளோடு பணியாற்றியவர். இதன்போது இரண்டு தடவை பதவியையும்
ஆட்சியையும் இழந்தவர். இப்பொழுதும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஜனாதிபதி
கோத்தபாயவுடனேயே வேலை செய்ய வேண்டியுள்ளது. (இது முன்னரை விட வேறான
நெருக்கடிச் சூழல் என்பதால் ஜனாதிபதி அதிகம் நெருக்கடி கொடுக்க மாட்டார்
என எதிர்பார்க்கலாம். அப்படி நெருக்கடியைக் கொடுத்தால் அது அவருக்கே
சுருக்குக் கயிறாகக் கூடிய அபாயமுண்டு. அவருக்கு மட்டுமல்ல, ஏனைய
ராஜபக்ஸக்களுக்கும்தான். உண்மையான அர்த்தத்தில் ரணில் ஆட்சியைப்
பொறுப்பேற்றதன் மூலம் ராஜபக்ஸக்களின் நெருக்கடியைத் தணித்திருக்கிறார்.
இதனால்தான் ராஜபக்ஸக்கள் ரணிலை வரவேற்றிருக்கிறார்கள். இப்பொழுது அதிக
நன்மையடைந்திருப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஸக்களுமே).

எதிரும் புதிருமான தரப்புகள் இணைந்திருக்கும் இந்தப் பயணம் எவ்வளவு
தூரம், எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்வியே.

இன்று இலங்கைக்குத் தேவையாக இருப்பது, தேசிய அரசாங்கமொன்றை
ஸ்தாபிப்பதாகும். அதற்குரிய பண்புகளோடு. அந்த அரசாங்கம்பொருளாதார
நெருக்கடிக்கு உடனடித்தீர்வு, இடைக்காலத் தீர்வு,  நீண்ட கால
அடிப்படையிலான தீர்வு என வகைப்படுத்தித் திட்டமிடல்களைச் செய்து இயங்க
வேண்டும். இதற்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை  வகுக்கப்பட வேண்டும்.
அது உடனடியாக அமூலாக்கம் செய்யப்படுவது அவசியம். இந்த அபாய
நெருக்கடிக்குத் தீர்வு காணக் கூடியவாறு ஒரு முகப்பட்டு தீர்மானங்களை
எடுக்கின்ற ஒரு ஒழுக்கம் தேவைப்படுகிறது. இதை எப்படி உருவாக்குவது?
மக்களின் மீது அக்கறை கொண்டு செயற்படுவதன் மூலமே இதை உருவாக்க முடியும்.
மக்கள்தான் நாடு. நாடு என்பது வெறும் நிலமும் கடலும் மலைகளும் காடுகளும்
அல்ல. அது மக்களும் அவர்களுடைய பாதுகாப்பான வாழ்க்கையுமாகும். மக்களுடைய
வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பது மக்களைப் பாதுகாப்பதாகும். மக்களைப்
பாதுகாப்பது என்பதே நாட்டைப் பாதுகாப்பதாகும்.

இதைச் செய்ய முன்வராத சக்திகளையும் ஆட்களையும் மக்கள் இனங்காண வேண்டும்.
அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும். அல்லது நிராகரிக்க
வேண்டும். இது மக்கள் 100 வீதம் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம். கரணம்
தப்பினால் மரணம் என்ற நிலையில் மக்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் இதைச்
செய்துதான் ஆக வேண்டும். தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்னிறுத்தி,
அதற்கு எதிராகப் போராடியபடியால்தான் சிறிய அளவிலான மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன. இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதற்குத்
தொடர்ந்து போராட வேண்டும். தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும்.
மக்களே வழிப்படுத்துநர்களாக இருக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது.

நெருக்கடிகள் உச்சமடையும்போது மக்களின் பங்கேற்பு உருவாகுவது உலக நியதி.
ஆகவே இந்த ஆட்சியை மக்களே வழிநடத்த வேண்டும். புதிய அரசாங்கம்
பொறுப்பெடுத்துள்ளது. புதிய பிரதமரும் அமைச்சர்களும் வந்துள்ளனர். ஆகவே
இனிப் பிரச்சினையில்லை. எல்லாமே சீராகி விடும் என்று  நம்பவோ
எதிர்பார்க்கவோ முடியாது. அதையே புதிய அரசாங்கத்திலும் தொடரும் நிலையும்
பிரதமரின் அறிவிப்பும் சொல்கின்றன. மக்கள் அரசாங்கத்தை வழிநடத்தாமல்,
அதைச் சரியாகக் கண்காணிக்காமல் விட்டதன் தவறே இன்றைய அறுவடை என்பதையும்
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மக்கள் அரசாங்கத்தை
வழிப்படுத்துவது, கண்காணிப்பதுடன் தம்முடைய வாழ்க்கை முறையையும் மாற்றிக்
கொள்ள வேணும்.

நெருக்கடி நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றம் தேவைப்படுகிறது.
உணவு, உடை, போக்குவரத்து, பண்பாட்டு நிகழ்வுகள் என அனைத்திலும் இந்த
மாற்றம் தேவை. அத்துடன் முக்கியமாக உழைப்பிலும் உற்பத்தியிலும் பன்மடங்கு
ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எல்லோரும் இரண்டு அல்லது இரண்டரை மடங்கு
உழைக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் தனியே உத்தியோகம் என்று அலுவல
வட்டத்திற்குள் சுற்றிக் கொள்ளாமல் களத்திலும் பணியாற்ற வேண்டும். இந்தப்
பணி ஏதோ கடமைக்குச் செய்யும் பணி என்றில்லாமல் அர்ப்பணிப்புடன்,
புதிதாக்குகிறோம் என்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டும். அரசினால்
உருவாக்கப்படும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ச்சியாக மதிப்பாய்வு
செய்யப்படுதல் அவசியம். சரியான கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கப்பட
வேண்டும்.

பேரிடர் மற்றும் தேசிய நெருக்கடிகளின் போது படைத்தரப்பின் சரியான
பங்களிப்பு மிக அவசியமான ஒன்று. இலங்கையின் வரலாற்றில் அதிக நிதிச் செலவு
செய்யப்பட்டது படைத்துறைக்கே. ஆளணி வளமுடையதும் படைத்தரப்பே. எனவே இன்றைய
பொருளாதார (அரசியல் நெருக்கடியை அல்ல) நெருக்கடியைக் கடப்பதற்கு
படைத்தரப்பின் பங்களிப்பு அவசியம். அவர்களை உற்பத்தித்துறையில்
ஈடுபடுத்துவது அவசியம். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்படி அனைத்துத் தரப்பிலும் ஒரு முகப்பட்டு மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகளே இந்தத் தேசிய இடரை நீக்கப்பயன்படும். இதற்கான வழியை
அரசாங்கமும் காட்ட வேண்டும். புதிய பிரதமரும் அவரை அங்கீரித்துள்ள
ஜனாதிபதியும் கூட்டாக இணைந்து இந்த வழிகாட்டலைச் செய்ய வேண்டும். அவர்களை
நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கு. ஆக பரஸ்பர உறவும் பங்கேற்புமான
நிலையில்தான் புதிய சூழலை உருவாக்க முடியும்.

இது முதற்கட்டம்.

அத்தோடு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியற் சாசனத் திருத்தங்களையும் செய்ய
வேண்டும். முக்கியமாக 19 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை
நிவர்த்திப்பது, இருபதாவதை நீக்குவது, பதிலாக 21 ஐ முன்னேற்றகரமாகக்
கொண்டு வருவது. அதில் குறிப்பாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து
பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களைக் கூட்டுவது எனப் பல வேலைகளைச் செய்ய
வேண்டும். அதாவது ஜனநாயகத்தின் நரம்பைப் பலப்படுத்த வேண்டும். அதில்தான்
மக்களுக்கு பாதுகாப்பும் நன்மைகளும் உத்தரவாதங்களும் உண்டு. இதையெல்லாம்
செய்வது – நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்ல.

என்னதான் ஜனாதிபதி ஆட்சிமுறையை – நிறைவேற்று அதிகாரத்தை நீக்குமாறு
சொன்னாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை இழக்க விரும்புவதில்லை.
இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் கோத்தபாயவுக்கு எதிராக மக்கள் இன்னும்
போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் தொடரட்டும் என்று
பிரதமரும் சொல்லியிருக்கிறார். இந்தப் போராட்டம் மீண்டும் ஒரு தீவிர
நெருக்கடியைக் கொடுக்குமாக இருந்தால் ஏனைய ராஜபக்ஸக்களைப் போல
கோத்தபாயவும் பதவியை இழக்க நேரிடும். அப்பொழுது அந்த இடத்துக்கு ரணில்
விக்கிரமசிங்கவே வருவார். அரசியலமைப்பு அப்படித்தான் சொல்கிறது. எனவே
ரணில் முற்று முழுதாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை
நீக்குமாறு எந்தளவுக்குக் கோருவார் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பல
தடவை இந்த ஜனாதிபதிக் கதிரைக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி
கண்டவர் அவர். பிரதமர் பதவி எதிர்பாராமல் கிடைத்ததைப்போல ஜனாதிபதிக்கான
வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கக் கூடும்.

ஆனால், இப்பொழுதுள்ள நிலையில் ஆட்சியை இழந்திருந்தாலும் ராஜபக்ஸக்களின்
பொதுஜன பெரமுனதான் இன்னும் – இந்தக் கட்டுருரையை எழுதிக்
கொண்டிருக்கும்போதும் – செல்வாக்கோடிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க
பொறுப்பேற்ற பின் நடந்த பிரதிச் சபாநாயகர் தெரிவில் ரணிலின் கோரிக்கையை
மீறி, பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தின்படியே தெரிவு நடந்தது. ஆகவே இது
தேசிய அரசாங்கமொன்றின் உருவாக்கத்தையும் இயங்கு நிலையைக் குறித்தும்
கேள்விகளை எழுப்புகிறது. அதற்கான ஒழுக்கமும் அரசியற் பண்பாடும் இலங்கை
அரசியற் சூழலில் முதிரவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆகவே
கேள்விக்குறியின் முன்னேதான் நாடு தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய அரசியற் தரப்புகளும் சரி, மக்களும் சரி எல்லோருமே பிரச்சினைகளின்
மையத்திலேயே தொடர்ந்தும் உள்ளனர். வேறு மீட்பர்கள் யாரும் இல்லை என்ற
துயர நிலையே இதற்குக் காரணம்.

ரணிலின் திறமையெல்லாம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தனக்கான
வெற்றிகளைப் பெறுவதிலுமே எப்போதும் இருந்திருக்கிறது. அதற்கான அரசியற்
தந்திரோபாயங்கள், நுட்பங்கள் எல்லாவற்றிலும் முதிர்ச்சியும் தேர்ச்சியும்
உள்ளவர் அவர். இதனால் அவரை, அவருடைய மாமனார் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.
ஜெயவர்த்தனவுடன் இணைத்து “அரசியல் நரி” என்று குறிப்பிடுவதுண்டு.
இப்பொழுது கூட அவர் தந்திரங்கள், சுழிப்புகளின் வழியேதான் தன்னுடைய
படகைக் கொண்டு செல்லப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீழ்ச்சியடைந்திருக்கும் தன்னுடைய ஐ.தே. கட்சிக்கு சேலைன் ஏற்றி
உயிர்ப்பூட்டிக் கொள்வார். புலிகளை 2002 இல் உடைத்ததைப்போல
எதிர்த்தரப்புகளை உடைத்துப் பலவீனப்படுத்துவார். தேவையான நண்பர்களை
(எதிரிகளையும்தான்) பாதுகாத்துக் கொள்வார். ஏனெனில் அவர் மிகச் சிறந்த
ராஜதந்திர முதிர்ச்சியடைந்த ஒரு தலைவர். ஆகவே அவர் தன்னைப்
பலப்படுத்துவதில்தான் குறியாக இருப்பாரே தவிர, நாட்டை ஒழுங்கமைப்பதிலும்
நெருக்கடியைத் தணிப்பதிலும் பெரிய அளவுக்கு அக்கறை காட்டுவார் என்றில்லை.
ஆனாலும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டு.
பொருளாதார நெருக்கடி என்பது சிறுபான்மையின மக்களின் இனப்பிரச்சினையைப்போல
சாட்டுப் போக்குகளைச்சொல்லிச் சமாளிக்கக் கூடியதல்ல. அது மக்களின்
வயிற்றுப்பிரச்சினை. வயிறு கொதிக்கத் தொடங்கினால் அவர்கள் எதைப்
பற்றியும் பொருட்படுத்த மாட்டார்கள். தெருவில் இறங்குவார்கள். தீயோடு
சூழ்வார்கள். இதைப்பற்றி ரணில் விக்கிரமசிங்கவும் அறிவார்.

இப்பொழுது மீளமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையிலும்  பாராளுமன்றத்திலும்
உள்ளவர்கள் அத்தனைபேரும் (225 உறுப்பினர்களும்) கடந்த காலத்தின் கசப்பான
வரலாற்றுப் பக்கத்தை நிரப்பியவர்களே. இவர்கள் அனைவரும் விட்ட கூட்டுத்
தவறுகளின் விளைவே இன்றைய நெருக்கடியாகும். இப்பொழுது மீளவும் இவர்களே
புதிய வடிவத்தில் (பொருளில் அல்ல) காட்சி மாற்றம் செய்துள்ளனர்.
உண்மையில் இது காட்சி மாற்றம் கூட இல்லை. அதே காட்சிகள்தான். அப்படியே
சில சமரசங்களைச் செய்து கொண்டு பாராளுமன்றத்தையும் அமைச்சரவையும்
நிரப்பியிருக்கிறார்கள். இதனால்தான் நெருக்கடியைத் தீர்க்கவோ தணிக்கவோ
முடியாதிருக்கிறது. அதற்கான சிந்தனைத்திறனும் செயல்முனைப்பும் இவர்களிடம்
இல்லை. அப்படியொன்றைப் பற்றிச் சிந்திக்கும் முறைமை – பாரம்பரியமே
இவர்களுக்குக் கிடையாது.

ஆகவே இவர்களை மாற்றாமல், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை
மாற்றம் செய்யாமல் எந்த முன்னேற்றமும் (மாற்றமும்) ஏற்படாது. இதனால்தான்
புதிய பிரதமர், புதிய அமைச்சரவை என்று காட்சி மாற்றம் செய்த பின்னும்
காலிமுகத்திடலில் போராட்டம் தொடரப்படுகிறது. இந்தப் போராட்டத்தின்
அடிப்படைத் தொனியே  System for Change என்பதாகும். இந்தக் குரல் இன்று
மக்களால் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல அரசியலை தூர
நின்று பார்க்காமல் அருகிலிருந்து செயற்படுத்த விளைகின்றனர்.  குறிப்பாக
இளைய தலைமுறையினர். இளைய தலைமுறையினர் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் எந்தப்
புதிய மாற்றமும் நிகழாது. எந்தப் பிரச்சினையும் தீராது என்ற நம்பிக்கை
மக்களிடம் வலுத்துள்ளது. அதாவது கட்சிகளின் மீதான நம்பிக்கை
வீழ்ச்சியடைந்துள்ளது. தலைவர்களைக் குறித்து மக்களுக்கு வெறுப்பே
ஏற்பட்டுள்ளது. இதை நாட்டின் நிலைமையும் ஆட்சிப்போக்கும் நிரூபிக்கின்றன.
இதை இப்பொழுது தினமும் காலிமுகத்திடலில் நடக்கின்ற போராட்டத்தின்போது
நேரில் பார்க்கலாம். காலிமுகத்திடலில் ஒரு புத்தபிக்கு தமிழில்
பேசுகிறார். “எப்படியோ பாராளுமன்ற தேர்தல் வரத்தான் போகிறது. வருகிறபோது
225 தொகுதிகளிலும் இந்த போராட்ட இளைஞர் யுவதிகள் தேர்தலில் நில்லுங்கள்.
தற்போதைய அரசியல்வாதிகளுக்கு பென்சனை மக்களாகிய நாம் கொடுப்போம்”
என்கிறார்.

ஒரு சாமான்ய பெண்மணி போராட்டக் களத்தில் இந்த 225 பேருக்கு எதிராகவும்
வெடித்துப் பேசுகிறார். “உங்களில் ஒருவராவது இங்கு வந்து நம்ம
பிள்ளையளோடை பேசுங்க பார்ப்பம்” என சவால் விடுகிறார்.

எல்லோருமே பாராளுமன்றக் கதிரையை விட்டு விலக வேண்டும் என ஆரம்பத்திலேயே
காலிமுகத்திடலில் இளஞ் சந்ததி குரலெழுப்பியது. கோத்தா , மகிந்த மட்டுமல்ல
225 பேரில் ஒருவருமே விலகினாரில்லை. இதே அரசாங்க கட்டமைப்புக்குள் நடந்த
இத்தனை ஊழலையும் இனவாதத்தையும் பொருளாதார வீழ்ச்சியையும் பதவித் துணியால்
மந்திரிகளும் எம்பிக்களும் மறைத்தபடி அரசாங்கத்தை ஓட்டியதில் – ஒரு
பகுதியளவாவது – கூட்டுப் பொறுப்பு எடுக்கத்தானே வேண்டும்.

நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடையும்வரை, இளஞ் சந்ததி
அரசாங்கத்துக்கு எதிராகவும் அதன் முறைமைக்கு எதிராகவும் போராடும்வரை
தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மக்களுக்கான அரசாங்கத்தில் பங்குகொள்ள என்ன
அருகதை இருக்கிறது? இந்த மாதிரிக் கேள்விகள் பல திசைகளிலிருந்தும்
எழுகிறது. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய மாற்றம் இதுவெனலாம்.
இதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் காலிமுகத்திடலிலும் நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் நினைவுச் சுடரை
ஏற்றக்கூடியதாக இருந்தது. ஆனால், இந்த மாற்றத்தை உள்நாட்டுச் சக்திகளும்
பிராந்திய மற்றும் வெளிச் சக்திகளும் எந்தளவுக்கு அனுமதிக்கும் என்ற
கேள்வியுண்டு. ஏனென்றால் இலங்கை அரசியல் தனியே இலங்கைக்குள் மட்டும்
நடக்கின்றன ஒன்றல்ல. அது புவிசார் அரசியலின் விளைவின்பாற்பட்ட ஒன்றாக
உள்ளது. அதனால்தான் அது முடிவற்று அலைக்கழிக்கப்படுகிறது. இதைப்புரிந்து
கொண்டு செயற்படக் கூடிய பேராளுமை ஒன்று தலைமைத்துவத்தைப் பெறும் வரை
மேலும் மேலும் நெருக்கடியே. மேலும் மேலும் துயரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்