
விஜய் டிவி புகழ் தனது திருமண தேதியை அறிவித்துள்ள நிலையில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
நகைச்சுவை நடிகரான விஜய் டிவி புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கூட இதனைக் குறிப்பிட்டு புகழைப் பாராட்டினார்.
புகழ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’, சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. தற்போது ‘ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த பென்ஸியாவை காதலித்துவருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். இதனையடுத்து அந்நிகழ்ச்சியில் புகழ் பெண்களுடன் பேசினால் உடனடியாக டிஜே ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு…’ என்ற பாடலை ஒலிக்கவிடுவார். உடனடியாக புகழ் சுதாரித்துக்கொள்வதுபோல ரியாக்சன் கொடுப்பார். இது ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழைத்தது.
இந்த நிலையில் புகழ் தனது நீண்டநாள் காதலி பென்ஸியாவை வருகிற செப்டம்பர் 5 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.