தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலையா?

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 10 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று ஒத்திகையை மேற்கொண்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நீதவான் சாட்சிய விசாரணையிலும் குடும்பத்தாருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

டிச.15 ஆம் திகதி தினேஷ் ஷாஃப்டரின் கழுத்து மற்றும் கைகள் காரில் கட்டப்பட்ட நிலையில் பொரளை மயானத்தின் ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொது மயானத்தின் ‘அநாதை பக்கம்’ எனப்படும் பகுதியில் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் அவரது கழுத்தில் கிடந்த அண்டெனா கேபிளையும், வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மூலம் வாங்கியிருந்த (கைகள் கட்டப்பட்டிருந்த) கேபிளையும் பொலிஸ் பரிசோதகர்கள் அவரது வீட்டில் கண்டுபிடித்தனர்.

ஷாஃப்டர் அண்டெனா வயரால் தன்னைத்தானே கழுத்தை நெரித்ததும் தெரியவந்துள்ளது.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னரான, அவரது நடத்தைகள் பலவற்றின் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக விசாரணைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். வர்த்தக நடவடிக்கைகளால் கடன் சுமை அதிகரித்ததன் காரணமாக மன உளைச்சலுக்கு மருத்துவ சிகிச்சை கூட பெற்றதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார்.

இந்த ஆதாரங்களுடன், உடல் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டதுடன் இந்த மர்ம மரணம் மற்றும் சிசிடிவி தொடர்பாக ஷாஃப்டரின் மனைவி, மாமி உட்பட 84 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

ஷாஃப்டரின் அனைத்து அசைவுகளும் நாற்பது கமரா கோணங்களில் ஆராயப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் பணிப்புரையின் பேரில், கொலை மற்றும் ஒழுங்கமைக் கப்பட்ட குற்றப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்