
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும்
மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து
இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் ஷாஃப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள்
தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும்
இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்குச்
சென்று கொண்டிருந்ததுடன், உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்கு பாரியளவு
சிற்றுண்டிகளை எடுத்துச் சென்றமை தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் கவனம்
செலுத்தியுள்ளன.
மயானத்திற்குச் செல்வதற்கு முன் வேறு இடத்தில் தினேஷ் ஷாப்டர்
தின்பண்டங்களை உண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தினேஷ் ஷாஃப்டரின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் விரிவாக
பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரணைக்கு
உட்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய விசாரணைகளில், தினேஷ் ஷாப்டரின் வர்த்தக விவகாரங்களுக்குத்
தொடர்ந்து ஆலோசனை வழங்கியவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் நடத்தை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் நான்கு பேரின் தொலைபேசி
பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தொலைபேசி
நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று
உத்தரவிட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.