
தாய்லாந்தில் 3 தினங்கள் காணாமல் போயிருந்த பெண்ணொருவர், குளியலறையில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கதவை திறக்க முடியாத நிலையில் குளியலறைக்குள் இப்பெண் சிக்கியிருந்தார். தான் இறந்துவிடக்கூடும் என எண்ணிய இப்பெண் குளியலறை சுவரில் பிரியாவிடை குறிப்பொன்றையும் எழுதியிருந்தார்.

54 வயதான இப்பெண், தலைநகர் பேங்கொக்கிலுள்ள, 3 மாடிகள் கொண்ட வீடொன்றில் தனியாக வசிக்கிறார். இவ்வீட்டில் இரும்பிலான வாயிற்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பெண் உதவி கோரி சத்தமிட்டதை எவராலும் கேட்க முடியவில்லை.
3 தினங்களின் பின் மிகவும் களைத்துப் போன இப்பெண், தான் வெளியேற முடியும் என்ற நம்பிக்கைய இழந்துவிட்டார். இதனால், முகத்துக்குப் பயன்படுத்தப்படும் கிறீம் ஒன்றினால் சுவரில் குறிப்பொன்றை எழுதினார். ‘நான் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிக்கிக் கொண்டேன். என்னால் வெளியே வர முடியவில்லை’ என அதில் எழுதப்பட்டிருந்தது.
உதவி கோரி நான் சத்திமிட்டேன். ஆனால் ஒருவராலும் அதை கேட்க முடியவில்லை. எவரும் வரவில்லை’ என அவர் கூறியுள்ளார்.
பொலிஸாருக்கு இப்பெண்ணின் சகோதரி கொடுத்த முறைப்பாட்டையடுத்து இப்பெண் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக அவரின் சகோதரி கூறுகையில், ‘ பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்ற போதிலும் எவரும் பதிலளிக்கவில்லை. அவரின் கார் வீட்டில் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவல்லை என்பது தெரிந்தது. அவருக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என நான் கவலையடைந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்து அவ்வீட்டுக்கு வந்த பொலிஸார், இரும்புகளை அறுத்து வீட்டினுள் நுழைந்தனர்.
2 ஆவது மாடிக்கு பொலிஸார் சென்றபோது, 3 ஆவது மாடியில் ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்டது என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 ஆவது மாடியிலுள்ள படுக்கை அறையுடன் இணைந்த குளியலறை ஒன்றில், அப்பெண் காணப்பட்டார். குளியலறை கதவை திறப்பதற்கு பொலிஸாருக்கு சுமார் ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது.
‘குளியலறைக்குள் தொலைபேசி இருக்கவில்லை. உள்ளே இருந்த பல பொருட்களையும் பயன்படுத்தி கதவை உடைப்பதற்கு நான் முயற்சித்தேன். அது முடியவில்லை. உதவி கோரி அழுதேன். அதை ஒருவருக்கும் கேட்க முடியவில்லை.
உயிர் வாழ்வதற்காக தினங்களும் குழாய் நீரை மாத்திரம் நான் அருந்தினேன். குழாய் நீர் முடிவடைந்திருந்தால் நான் இறந்திருப்பேன்’ என அப்பெண் தெரிவித்துள்ளார்.