தம்பி அப்பா என்ற ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் பிரதான மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் நேற்றுக் காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

1936ஆம் ஆண்டு பிறந்த குமார் பஞ்சரட்ணம் தபாலதிபராக ஆரம்பத்தில் பணியாற்றியிருந்தார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் ஜோர்ஜ் மாஸ்டர் செயற்பட்டிருக்கின்றார்.

இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.

தம்பி அப்பா என்று அன்புடன் போராளிகளால் அழைக்கப்பட்ட அவரைப் பற்றிய முகநூல் அஞ்சலிக் குறிப்புக்களில் ஒன்று பின்வருமாறு:

சமாதான காலத்தில் கிளிநொச்சில் பேச்சுவார்த்தைகள் தடல் புடலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்.


புதிய புதிய பெறுமதிவாய்ந்த வாகனங்கள் வன்னியின் தெருக்களில் வலம்வரும்.


வாகனங்களும் மனிதர்களும் பரபரப்பாகிக்கொண்டிருக்க வீதிகள் மறிக்கப்பட்டிருக்கும்.


பரவிப்பாஞ்சானில் மிதி வண்டியில் வயர் பாக் (Bag) கொழுவியபடி ஒரு முதியவர் வருவார். அந்த மிதிவண்டி வருவதில் தாமதம் ஏற்பட்டால் அங்கிருப்பவர்கள் பரபரப்பாகியிருப்பதை பல நாள் பார்த்திருக்கிறோம்.

வருவார் பலா மரத்தில் மிதிவண்டியை சாத்திவிட்டு உள்ளே செல்வார். அதன் பின்னரேயே பேச்சுக்கள் தொடங்கும்.


உங்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்