தமிழ் மக்களுக்கான தலைமை என்பது …! -வி தேவராஜ் மூத்த ஊடகவியலாளர்

கூட்டமைப்பு 2009 மே மாதத்துக்குப் பின் காலாவதியாகிவிட்டது.தமிழ்த் தலைமைகளின் ‘அரசியல் சித்தாந்தம்’ இணக்க அரசியலே !

யூத இனம் தம்மைக் கட்டமைத்துக் கொள்வதற்குக் கைக்கொண்ட கோட் பாடு சியோனிசம். ஆனால் தமிழ்ச் சமுகம் எத்தகைய கோட்பாடும் இன்றி உள்ளது. தமிழ் மக்களிடையே தூரநோக்கு கொண்ட தலைவர்கள் இல்லை பதவிகள், வாக்கு வங்கியைத் தக்கவைப்பதிலேயே தமிழ்த் தலைவர்களும், அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர்.   தமிழ்ச் சமூகத்தை முன் நகர்த்துதல் குறித்த சித்தாந்தம் தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை. தமிழர் அரசியலில் உள்ள பெரும் குறைபாடு இதுவாகும். இதுபற்றி நிறையவே பேசப்பட்டாகிவிட்டது. ஆனால் தமிழ்த் தலைமைகளின் ‘மண்டைக்குள்’ ஏறியதாக இல்லை. அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள முன்வந்ததாகவும் இல்லை. நாடாளுமன்ற மாகாண சபைகளுக்கான நாற்காலிகளுக்கான வாக்குகளுக்காக தமிழ் மக்களை பிரித்து வைத்து வாக்கு வேட்டையாடுகின்றனர்.


1.  இன்று ஒட்டுமொத்த தமிழ்த் தலைமைகளும் தமக்குள் பிரிந்து நின்று   இணக்க அரசியலையே நடத்துகின்றனர். 2. ஒரு பிரிவினர் அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் நடத்துகின்றனர்.ஏணையவர்கள் மறைமுக இணக்க அரசியலை நடத்துகின்றனர். 3. மொத்தத்தில் தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தும் தலைமைகளை தமிழர் அரசியல் பரப்பில் காண முடியாதுள்ளது என்ற கசப்பான உண்மையை தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 4. சிங்களத் தலைமைகள் ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அதிகாரப் போட்டி இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிரானதாகவோ அல்லது தடைக் கல்லாகவோ அமைந்துவிடவில்லை. 5. ஆனால் தமிழ்த் தலைமைகளுக்கிடையிலான போட்டி என்பது இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான நகர்வுகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் சவால் நிறைந்ததாக அமைந்து விடவில்லை. சுதந்திர இலங்கையில் தமிழர்களின் போராட்ட வரலாற்றில்  சிங்கள தேசத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிற வேறு எந்த அமைப்பும் சவாலாகவோ சிம்ம சொப்பனமாகவோ இருந்ததில்லை. 6. தற்போதும் கூட தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெறும் அதிகாரப் போட்டியோ டொலர் பிரச்சனையோ அல்லது ஒட்டு மொத்தமாக முழு நாட்டு மக்களையும் அடுத்த வேளைபற்றி யோசிக்க வைத்துள்ள  பொருளாதாரப் பிரச்சனையோ தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சிறு தொய்வைக் கூட ஏற்படுத்திவிடவில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவர். 7. அதாவது நாடு எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த போதும் தமிழ் மக்களுக்கு எதிரான நகர்வுகளை நிகழ்ச்சி நிரல்களை தாமதப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ தயார் இல்லை என்ற மனோதிடத்துடன் இலங்கை அரசு தமிழர் விரோதப் போக்கில் உள்ளது என்பதையே இது காட்டுகின்றது. 8. இலங்கை அரசினைப் பொறுத்து மூழ்கும் நாட்டினை என்றோ ஒருநாள் மீட்டுவிடலாம். ஆனால் தமிழர்களை அரசியல் சக்தியாக எழும்பவிட்டால் நாட்டைமீட்டெடுக்க முடியாது போய்விடும் என்ற நிலைப்பாட்டில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் இன்றும் உள்ளன. திருகோணமலை குருந்தூர் விவகாரங்கள் என விசுவரூபம் எடுத்துள்ள சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வுகளே இதற்குச் சான்று.
துரதிஷ;டவசமாக தமிழ்த் தலைமைகள் கையாளாகாத நிலையில் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்ற ரீதியில் வாக்கு வேட்டைக்கான களத்தைத் திறந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தபோது தமது உயிர்த் தியாகத்திலாவது இந்த மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்தி விட முடியாதா என நினைத்து தமிழகத்தில் 30 உயிர்கள் தம்மைத்தாமே எரித்துக் கொண்டன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்கள் கொன்றொழிக்கப்படுவதையும் தமிழக மக்களின் தியாகங்களையும் மௌனமாக பார்த்து நின்றனர். குறைந்த பட்சம் தமது நாடாளுமன்றப் பதவிகளைக்கூட துறந்து தமது எதிர்ப்பை அடையாளமாகவேணும் காட்ட முன்வரவில்லை.
ஆனால் தற்போது திலீபனின் தியாகத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இருந்து தமிழர் விவகாரம் குறித்த அனைத்து விடயங்களையும் தமிழ்த் தலைமைகள் போட்டிக் களமாக இன்று திறந்து விட்டுள்ளன.

கூட்டமைப்பின் போர்வையில் தமிழரசுக் கட்சி அரசியல்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கெதிரான கையெழுத்து வேட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாகவே ஆரம்பத்தில்  காட்டப்பட்ட போதும் தற்போது தமிழரசிக் கட்சியின் இளைஞர் அணியின் செயற்பாடாகக் காட்டப்படுகின்றது.
இந்தக் கையெழுத்து வேட்டையில் இருந்து தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் தமிழரசுக் கட்சியே முன் நிறுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்  சாணக்கியன் எம்பி இடையில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவைசேனாதிராஜா தவிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை களத்தில் காண முடியாதுள்ளது.


தென்னிலங்கையில் மாற்றத்துக்கான சக்தியாக மேலெழுந்த  ‘அரகலயாக்களுக்கு’ ஆதரவாக யாழில் இடம்பெற்ற தீப்பந்த ஊர்வலம்கூட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி சார்பிலேயே நடத்தப்பட்டது. இவை அணைத்துமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போர்வையில் தமிழரசுக் கட்சிக்கான அரசியலை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தமிழ் மக்களுக்கென உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியின் அரசியல் கூடாரமாக மாற்றுவதில் 2009 இல் போர் மௌனிக்கப்பட்டபின் தமிழரசுக் கட்சி தெடர்ந்து வெற்றிகளைப் பெற்றது. அதற்கு சாதகமாக தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டமையும் தமிழரசுக் கட்சியின் செயலாளரே தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டவராகவும் இருந்தமையானதும் தமிழரசுக் கட்சி தனது அரசியலை செய்வதற்கு இலகுவாகியது.

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும்வரை அடக்கிவாசித்த தமிழரசுக் கட்சி போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூடான தமிழரசுக் கட்சியின் அரசியலை வேகமாக முன்னெடுக்கத் தொடங்கியது. 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் அதற்கென யாப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டபோதெல்லாம்; சாக்குப் போக்கு கூறி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலத்தைக் கடத்தினார். இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் பலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைவிட்டு வெளியேறினர். இன்னும் பலர் வெளியேற்றவும்பட்டனர்.மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போர் மௌனிக்கப்பட்ட பின் தடம்மாறி தமிழரசுக் கட்சியின் பாதையில் பயணிக்க வைக்கப்பட்டது. இதன் விளைவு தமிழர்களுக்கென தனி அமைப்பாக ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற கருத்தியலுக்கப்பால் ‘தமிழரசுக் கட்சிக்கான’ அமைப்பாக கூட்டமைப்பு உருமாறத் தொடங்கியது.  


அந்தவகையில் தமிழ் மக்களின் ஏகோபித்த அமைப்பு என்ற அந்தஸ்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 மே மாதத்துடன் அதாவது போர் மௌனிக்கப்பட்டதுடன் இழந்துவிட்டது. இனிவரும் காலங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது தமிழரசுக் கட்சியின் அரசியலாகவே இருக்கப் போகின்றது.
தமிழரசுக் கட்சியும் ஓரணியில் பயணிக்கும் நிலையில் இல்லை. உற் கடசிப்பூசல்கள் தலைமைத்துவப் போட்டிகுறித்த பனிப்போர் என்பன தமிழரசுக் கட்சியையும் பலவீனமான பாதையை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி தமிழரசுக் கட்சியும் சரி வாக்கு வேட்டைக்னான நிகழ்ச்சி நிரலைத் தவிற தமிழர் விவகாரத்துக்கான தீர்வு குறித்து எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி தீர்வு குறித்த ‘வார்த்தை ஜாலங்களை’ அள்ளி வீசும் தரப்பாகவே உள்ளன.


அந்தவகையில் தமிழ் மக்களுக்கான தலைமை வெற்றிடமாகிவிட்டது. அந்த வெற்றிடம் எவ்வாறு நிரப்பப்படப் போகின்றது என்பதுதான் தமிழ் மக்கள் முன் உள்ள இன்றைய கேள்வியாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் உள்ள தமிழ்த் தலைமைகளும் பதிலீடான அல்லது மாற்றுத்  தலைமையாக மேலெழும்பும் நிலையில் இல்லை. ஒவ்வொரு தலைமையும் தாமே ‘தமிழ் மக்களின் மனங்களை வென்றவர்கள்’; என்ற கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.  இவர்களிடமும் தமிழர் விவகாரத்துக்கான தீர்வுகுறித்த எந்த பொதியும் இன்றி தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு போன்று ‘தீர்வு குறித்த வார்த்தை ஜாலங்களை’ அள்ளி வீசும் தரப்பாகவே உள்ளன.மொத்தத்தில் தமிழர்தரப்பில் தலைமை என்பது ‘வெட்டவெளி பொட்டல் நிலமாக’ உள்ளது.


அந்த வகையில் 
தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்.தமிழர் விவகாரம் சர்வதேச உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக உள்ளது. தமிழர் விவகாரம் குறித்து சர்வதேச உறவுகளில ஏற்படும் மாற்றங்களே தமிழர் விவகாரத்துக்கான தீர்வினையும்இ இலங்கை மீதான அழுத்தத்தையும் உருவாக்கும் என்பதை தமிழர் தரப்பு உணர வேண்டும்.தமிழர் தரப்பினரின் ராஜதந்திர நகர்வுகள் இலங்கை அரசாங்கங்களையும் சர்வதேச சமூகத்தையும் வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உற்பட அணைத்து தமிழ்க் கட்சிகளுமே இணக்க அரசியலையே நடத்துகின்றன. ஒரு பகுதியினர் வெளிப்படையான இணக்க அரசியலை நடத்துகின்றனர். மறு பகுதியினர் மறைமுக இணக்க அரசியலை நடத்துகின்றனர்.தேசியத்திற்குள் மக்களை வழிநடத்திக் கொண்டு திருட்டுத்தன இணக்க அரசியலை மேற் கொள்கின்றனர்.இந்த இருபகுதியினர்களாலும் தமிழ் மக்களுக்குக் கிடைத்தது ஒன்றும் இல்லை.மொத்தத்தில் அணிவகுத்து தனித் தனி தீவுகளாக நிற்கும் இந்த தமிழ் ‘மாலுமிகளால்’ தமிழ் மக்களை கரைசேர்க்க முடியும் என்பது எதிர்பார்க்க முடியாததொன்றாகும்.

வடக்குக் கிழக்கு அரசியல் தலைமைகள் போன்று மலையக தொழிற் சங்க  அரசியல் தலைமைகளும் வாக்கு வேட்டைக்கான ‘பரபரப்புக்கான பிரசார அரசியலையே’ நடத்திக் கொண்டிருக்கின்றனர்.சிங்கள இராஜதந்திரத்திற்கு ஈடு கொடுக்கும்வகையில் தமிழ்த் தலைமைகள் இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே வரும்.தமிழ் மக்களிடையே விஷேட நிபுணத்துவமிக்கவர்கள் இருந்தபோதும் சிங்கள இராஜதந்திரத்திற்கு ஈடு கொடுக்கும்வகையிலான நகர்வுகளை தமிழர்தரப்பால் மேற் கொள்ள முடியாதிருப்பதற்கான காரணம் என்ன? தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2009 மே மாதத்திற்குப் பிறகு இழந்துவிட்ட நிலையில்நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழர் விவகாரத்தில் ‘அறிக்கை போர்’ நடத்தும் அமைப்பாகவே தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொண்டுள்ளது.மொத்தத்தில் தமிழர்களை வழி நடத்தக் கூடிய தலைமை தாங்கக்கூடிய நிலையில் தாயகத்திலும் புலத்திலும் எந்த அமைப்பும் இல்லை. இது சிங்கள தேசத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.சர்வதேசமும் ஜ.நா மனித உரிமைப் பேரவையும் தமிழர் விவகாரத்தை வைத்து ‘குரங்கு வித்தை’ காட்டுவதற்கும் தமிழ்த் தலைமைகளின் போக்கும் ஒற்றுமை இன்மையும் வசதியாக உள்ளது.

இந்த சர்வதேச நாடுகளுக்கும் ஜநாவுக்கும் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதென்பது இலகுவான விடயமல்ல என்பது தெரிந்த விடயமே. சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஏதும் கொடுக்கும் மன நிலையில் இல்லை தமிழ் மக்களுடன் எவ்வித சமரசத்துக்கும் தயாராக இல்லை என்பதை சர்வதேச நாடுகளின் தூதரக உயரதிகாரிகள் பலர் Off the Recoard ஆக தனிப்பட்ட உரையாடலின்போது பலமுறை வலியுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை இங்கு பதிவு செய்தல் பொருந்தும்.ஜிஜி பொன்னம்பலம் 50 : 50 கேட்டார். எஸ்.ஜே.வி செல்வநாயகம் பிராந்திய சபையைக் கேட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி தனி ஈழத்திற்கான ஆணையை தமிழ மக்களிடம் கோரினர். தமிழ் இளைஞர்கள் தனி ஈழம் கேட்டனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனி ஈழம் கேட்டார். தன்னாட்சி அதிகார சபை வரைபை முன் வைத்தனர். சமஷ்டிக்கு ஒத்துக் கொண்டனர்.இதனால் சிங்களத் தலைமைகள் ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் தற்போதைய தமிழ்த் தலைவர்கள் தமிழர் விவகாரத்திற்கான தீர்வுபற்றிப் பேசுகின்றனர். சமஷ்டிபற்றி பேசுகின்றனர். சுய நிர்ணய உரிமைபற்றிப் பேசுகின்றனர்ஆனால் எல்லாம் பேச்சளவில்தான். எழுத்தில் இவர்களிடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இவர்கள் குறித்து எந்த சிங்களத் தலைமைகளும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.சரியான தலைமைத்துவமின்றி தமிழர்தரப்பு இருப்பது தொடருமாயின் தமிழ் இனத்தை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதென்பது சிங்கள தேசத்திற்கு இலகுவாக பாதை அமைத்துக் கொடுப்பதாகவே அமையும்.


தமிழ் மக்களுக்கான தலைமை என்பது …!
தமிழ்த் தலைமை என்பது சிங்கள தேசத்தை எதிர் கொள்ளும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாக, சிங்கள இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் நகர்வுகளைக் கொண்டதாக, தமிழர் விவகாரத்திற்கான தீர்க்கமான தீர்வுப் பொதியினை முன்வைப்பவர்களாக, சர்வதேச சக்திகளை கையாளும் இராஜதந்திர நகர்வுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நகர்வுகள் தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் ஒரே திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்