
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு
தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை
உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை
கைப்பற்றுவதையும், கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதையும் நோக்கமாக
கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும்
தனித்தனியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து
களமிறங்குவதற்கு மத்திய குழுவின் பெரும்பான்மையினர் ஆதரவு
வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விடயம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை (9)
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பங்காளிக்கட்சிகளின்
தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனுடன் கூடி ஆராய்வதெனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.