
அறிமுக நடிகர் கார்த்திக் மதுசூதன் இயக்கி, தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூடி’ என பெயரிடப்பட்டு, அதன் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகில் முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் தயாராகும் படைப்புகளுக்கு அதன் உள்ளடக்கம் தரமானதாக இருந்தால் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பது உறுதி.
அந்த வகையில் அறிமுக நடிகர் கார்த்திக் மதுசூதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டூடி’ எனும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் இவருடன் நடிகை ஷிரிதா சிவதாஸ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
மதன் சுந்தர்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை தொகுத்து, இயக்கியிருக்கிறார் சாம் ஆர் டி எக்ஸ். கனெக்டிங் டாட்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘டூடி’ திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி கதை நாயகனும், இயக்குநர்களில் ஒருவருமான கார்த்திக் மதுசூதன் பேசுகையில், ” காதலை மையப்படுத்திய படம் என்றாலும், பெண்களின் கோணத்திலிருந்தும், ஆண்களின் கோணத்திலிருந்தும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கதையின் நாயகன், கிட்டார் இசைக்கும் இசைக்கலைஞன் வாழ்க்கையில் எந்த பெரிய இலக்கும் இல்லாத இவனுடைய வாழ்வில் காதலும், காதலியும் குறுக்கிடுகிறார்கள். அதன் பிறகு தன் பாதையை நாயகன் மாற்றிக் கொண்டாரா? இல்லையா? என்பதை விவரிப்பதே ‘டூடி’ படத்தின் திரை கதையாகும். காதல் இருந்தாலும் இசையும், சுவாரசியமான திரைக்கதையும் இதில் இருக்கிறது.
கொரோனா தொற்று காலகட்டத்திற்கும் முன்னர் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு தடைகளை கடந்து செப்டம்பர் 16ஆம் திகதியன்று வெளியாகிறது. திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய பால்ய பிராயத்து கனவு.
அதற்காக சமையல் தொழிலில் ஈடுபட்டு சம்பாதித்து, அதனை முதலீடு செய்து இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். சிறந்த உள்ளடக்கத்திற்கு தமிழ் ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு தருவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் ‘டூடி’ திரைப்படத்தை பட மாளிகையில் வெளியிடுகிறோம்” என்றார்.
புது முகங்கள் என்றாலும் படத்தின் இசையும், காட்சிகளும் ரசிகர்களுக்கு புதுமையானதாகவும், தரமானதாகவும் இருப்பதால் ‘டூடி’ படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தெரிய வருகிறது.