தமிழ் திரைப்படங்களில்  கோடிகளைக் குவித்த படங்கள் 

நவம்பர் 8, 2016. பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டம் தொடர்பாக நாட்டு மக்கள் பரபரப்பாக இருந்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிச்சைக்காரன் படக் காட்சியைக் கண்டு மக்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

நாட்டில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கி, அப்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மீம் உலகம் சும்மா இருக்குமா? உடனடியாக பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற இதுதொடர்பான ஒரு காட்சியையும் மோடி சொன்னதையும் இணைத்து மீம்களும் டிரால் விடியோக்களும் வெளியாகின.

காரணம், பிரதமர் சொன்னது அப்படியே பிச்சைக்காரன் படத்தில் அதற்கு முன்பே ஒரு காட்சியாக இடம்பெற்றதுதான். தமிழ்நாட்டு மக்கள் அந்த அவசர நிலையிலும் கவலை மறந்து சிரிக்க அந்தக் காட்சி உதவியது.

இதுபற்றி இயக்குநர் சசி ஒரு பேட்டியில் கூறினார்: இந்த விஷயத்தை சந்திரபாபு நாயுடு சொன்னதாக என் உதவியாளர் சொன்னார். எனக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. இது சினிமா காட்சியாக வெளிப்பட்டால் டிவிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும் என்பதால் காமெடி காட்சியாக அதைப் படத்தில் வைத்தேன். படத்தின் இறுதி வேலைகளில் நீளம் கருதி அந்தக் காட்சி வெட்டவேண்டிய நிலைமை கூட உருவானது. ஆனால் நான்தான் அந்தக் காட்சி படத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றார்.

காதல் படங்களை மட்டுமே ஆரம்பத்தில் எடுத்து வந்த இயக்குநர் சசி, பிச்சைக்காரன் போன்ற கதாநாயகனின் பிம்பத்தை உயர்த்தும் ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு காரணம் – எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி.

ஊர்ப் பெயரோடு சேர்த்து என் பெயரை சொல்கிறார்கள். ஆனால் நான் மட்டுமல்ல, ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் என் தம்பியும் தன்னை ஒரு ஹீரோவாகவே நினைப்பான். சின்ன ஆள்களிடமும் ஹீரோயிசம் உண்டு.

சசியிடம் அவர் சொன்னதுதான் பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் நாமும் ஹீரோயிசம் சார்ந்த படங்களை எடுப்போம் என 555 படத்தை எடுத்தார். அடுத்த படம் – பிச்சைக்காரன்.

பழைய புத்தகக் கடையில் ஒரு பேப்பர் கட்டிங்கைப் பார்த்துள்ளார் சசி. தன்னுடைய அம்மா உடல்நலமில்லாமல் இருந்தபோது கடவுளிடம் வேண்டியுள்ளார் மகன். திருப்பூரில் அவர் ஒரு தொழிலதிபர். அம்மா உடல்நிலை சரியான பிறகு பிரார்த்தனை நிறைவேறியதால் ஆறு மாதம் பிச்சை எடுத்து, ஆறு மாதம் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதுபோல 5 வருடங்கள் இருந்துள்ளார். இந்தச் சம்பவங்களைப் படித்தவுடன் சிலிர்த்துப்போயிருக்கிறார் சசி. அம்மா குணமான பிறகும் நேர்மையுடன் வேண்டுதலை நிறைவேற்றியவரைப் பற்றி படம் எடுக்க முடிவெடுத்துள்ளார். (அந்த மனிதரைச் சந்திக்காமல் படித்ததை வைத்து மட்டுமே படமெடுத்துள்ளார் சசி).

அம்மா குணமாகிவிட்டார், அதன்பிறகு கதாநாயகன் பிச்சை எடுக்கிறான் எனப் படம் எடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதால் கதையைக் கொஞ்சம் மாற்றியுள்ளார்.

பிச்சைக்காரர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்துள்ளார். தனது உதவியாளர்கள் மூலம் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். அதையெல்லாம் வைத்துத் தீவிரமான கதையாக உருவாக்கியுள்ளார். ஆனால், அந்தச் சமயம் பார்த்து இயக்குநர் பாலா, நான் கடவுள் படத்தை ஆரம்பித்துள்ளார். ஆஹா… பிச்சைக்காரர்களின் கதையை பாலாவே தீவிரமாக எடுப்பாரே என எண்ணி, தான் முடிவு செய்த கதையை ஓரமாக வைத்துள்ளார்.

2012-க்குப் பிறகு அதே கதையை மீண்டும் எடுத்து ஜனரஞ்சகமாக மாற்ற முயன்றுள்ளார் சசி. 555 படம் எடுத்து முடித்தபிறகு அதே கதையை ஒரு கதாநாயகன் செய்தால் எப்படியிருக்கும் என எண்ணி அதற்கேற்றவாறு இன்னும் கொஞ்சம் மாற்றியுள்ளார்.

டிஷ்யூம் படத்தில் விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சசி. விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்துக்குப் பிறகு பிச்சைக்காரன் படக்கதையை அவரிடம் சொல்லியிருக்கிறார். கதை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட விஜய் ஆண்டனி, கடைசியில் வாய்விட்டு அழுதுவிட்டார். கதை கேட்கும்போதே இந்தளவுக்குப் பாதித்தால் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தார். தயாரிக்கவும். பிச்சைக்காரன் வேடத்தை மையப்படுத்தி தமிழ்க் கதாநாயகர்கள் அவ்வளவாக நடிக்காததும் இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்துவிட்டது.

ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார் கதாநாயகனின் அம்மா. எந்த மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் துறந்து, அடையாளத்தை வெளிப்படுத்தாமல் 48 நாள்கள் பிச்சைக்காரனாக நீ வாழ்ந்தால் உன் அம்மா பிழைப்பார் என ஒரு சாமியார் சொல்கிறார். அதை நம்பி தன் பணக்கார வாழ்க்கையைத் துறந்து பிச்சைக்காரனாக வாழ்கிறார் கதாநாயகன். வசதியான ஒருவருக்குப் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்கிற மையக் கதையுடன் பிச்சைக்காரர்களின் இயல்பான வாழ்க்கையையும் இணைத்து சுவாரசியமாகக் கதை செய்திருந்தார் சசி. பிச்சைக்காரனாக நடிக்கும் செல்வந்தர் என்கிற கதையே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக அமைந்தது.

படத்துக்கு பிச்சைக்காரன் என தலைப்பு வைத்தது, படத்தின் கதாநாயகனும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. கதைக்கு இதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் சொல்லிவிட்டார். இந்தத் தலைப்பு சசிக்குச் சங்கடத்தை அளித்துள்ளது. கதைக்கு இதுதான் சரியான தலைப்பாக இருந்தாலும் இந்தத் தலைப்பைத் திரையுலகம் ஏற்றுக்கொள்ளாது, படத்தை வாங்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் சசி. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியே இதுதான் தலைப்பு எனும் சொல்லும்போது மாற்றுக்கருத்து இருக்க முடியுமா? கடைசியில் படத்தின் தலைப்பு படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. படம் வெளிவந்தபிறகு இந்தத் தலைப்புதான் மிகவும் பொருத்தமானது என விநியோகஸ்தர்கள் பாராட்டியுள்ளார்கள்.

விஜய் ஆண்டனியுடன் சலீம் படத்தில் நடிக்க இருந்தவர் சாத்னா டைடஸ். அதில் நடிக்க முடியாதவர், இந்தப் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தை அள்ளினாலும் அவர் அடுத்து நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. திடீரெனக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதற்கும் பிச்சைக்காரன் படமே காரணம். பிச்சைக்காரன் படத்தைத் தமிழகம் முழுக்க வெளியிட்டது கே.ஆர். பிலிம்ஸ். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சாத்னா ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சாத்னா, சமீபகாலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

முழுக்கதையும் அம்மாவாவை வைத்துத்தான் என்றாலும் பிரபல மூத்த நடிகைகள் யாரையும் அணுகவில்லை சசி. கதையில் கதாநாயகன் தான் முக்கியம். பிரபல நடிகையை அம்மா வேடத்தில் நடிக்க வைத்தால் கவனம் அவர் பக்கம் திரும்பிவிடும் என்று அவ்வளவாக அறிமுகம் இல்லாத, அதேசமயம் பணக்காரத் தோரணை வேண்டும் என்பதற்காக விளம்பரங்களில் நடித்த தீபா என்கிற தியேட்டர் ஆர்ட்டிஸ்டை அம்மாவாக நடிக்கவைத்துள்ளார்.

சரி, மருத்துவத்தை நம்பாமல் 48 நாள்கள் பிச்சைக்காரனாக ஒருவர் வாழ்ந்தாலே அவருடைய வேண்டுதல் நிறைவேறிவிடுமா?

இந்தக் கேள்வி சசிக்கும் தோன்றியிருக்கும். அதனால்தான் பக்திப் படங்களில் வருவது போல 48 நாள்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனியின் தாய்க்கு உடனேயே உடல்நலம் சரியாகிவிட்டதுபோல அவர் காட்சி அமைக்கவில்லை. உண்மையில் 48 நாள்களுக்குப் பிறகுதான் விஜய் ஆண்டனியின் தாய், சாகும் தருவாயில் உள்ளது போல காட்சி இருக்கும். அம்மா என்னை விட்டுப் போய்விடாத, எனக்கு நீ மட்டும்தான் இருக்க என்று விஜய் ஆண்டனி அவர் முன்னே உருகுவார். அந்த அம்மா கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்று ரசிகர்கள் எண்ணும்விதத்தில்தான் இறுதிக்காட்சிகள் இருக்கும்.

தவிரவும் சாமியாரின் கட்டளைப்படி விஜய் ஆண்டனி 48 நாள்கள் பிச்சைக்காரனாக வாழ்வது குறித்துக் கடைசிக்கட்டத்தில் விஜய் ஆண்டனிக்கும் அவருடைய நண்பர் பக்ஸுக்கும் இடையே ஒரு தீவிரமான விவாதமும் ஏற்படும். சாமியார் சொல்வது எல்லாம் நடந்துவிட்டால் எதற்கு இத்தனை மருத்துவமனைகள் என்று கேள்வி கேட்பார் பக்ஸ். எல்லா முயற்சியும் எடுத்துவிட்டு கடைசியாகத்தான் இதை நம்புகிறேன் எனப் பதில் அளிப்பார் விஜய் ஆண்டனி. இந்த உரையாடல்களும் காட்சிகளும் படத்தின் கதை, இறை நம்பிக்கை தொடர்பான இயக்குநர் சசியின் மன ஊசலாட்டங்கள் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். தனக்கு ஏற்பட்ட கேள்விகளையே காட்சிகளாக மாற்றி படத்துக்கு ஒரு தத்துவக் கோணத்தையும் அளித்துவிட்டார்.

இன்னும் சில நிமிடங்களில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் வேஷத்தைக் கலைக்க இருக்கும்போது, அவரைக் காவலர்கள் கைது செய்ய வருவார்கள். அப்போது காவலரின் கையைப் பிடித்து மணி பார்ப்பார் விஜய் ஆண்டனி. ஒரு பிச்சைக்காரன் என் கையைப் பிடிக்கிறியா என காவலர் விஜய் ஆண்டனியைத் தள்ளிவிடுவார். இதன்பிறகு 48 மணி நேரம் முடிந்துவிடும். காவலர்களிடம் பக்ஸால் விடுவிக்கப்பட்டு, கேரவேனுக்குள் சென்று நன்குக் குளித்துவிட்டு, பணக்காரனாக வெளியே வருவார் விஜய் ஆண்டனி. இதை நம்பமுடியாமல் பார்க்கும் அந்தக் காவலர், விஜய் ஆண்டனியின் கையைப் பிடித்து, மன்னிச்சுக்குங்க சார் என்பார். அதற்கு விஜய் ஆண்டனி, இவ்ளோ நாள் பிச்சைக்காரனா வாழ்ந்ததுக்கு நான் துளியும் அவமானமா நினைக்கலை. ஆனால் இப்போ பணக்காரனா இருக்கறதையே அவமானமா நினைக்கறேன் என்பார்.

இதுபோல கூர்மையான பல வசனங்களுக்குத் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தன. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையிலும் சிரிப்புகள், கேலிகள், கொண்டாட்டங்கள் இருக்கும் என்று காண்பித்ததை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் சசியின் வசனங்கள் மிகவும் வலுவாக அமைந்து படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தன.

இந்தப் படம் பற்றி விமரிசகரும் பத்திரிகையாளருமான மதன் கூறியதாவது: விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக வாழும் வாழ்க்கையை இன்னும் தீவிரமாகச் சொல்லியிருக்கலாம். இவ்வளவுதானா அந்த வாழ்க்கை என்கிற உணர்வைத் தந்துவிடுகிறது. அதேசமயம் இந்தக் குறை, படத்தின் ரசிப்புத்தன்மைக்குப் பாதகமாக அமையவில்லை என்றார்.

கடைசிவரை தன்னுடைய அடையாளத்தை வெளியே சொல்லாத விஜய் ஆண்டனி, வேண்டுதல் முடிய அரை மணி நேரம் முன்பு ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காதலியின் உயிருக்காக வேண்டுதலை மீறப்பார்ப்பார். அம்மாவின் உயிர் குறித்த அக்கறையைப் பின்னுக்குத் தள்ளி காதலிக்காக நண்பனுக்கு போன் செய்து மருத்துவமனைச் செலவுக்காகப் பணம் கேட்க முயல்வார். ஆனால் இன்னும் சில நொடிகளில் பிரார்த்தனையின் விதிமுறையை அவர் மீற இருக்கும் சமயத்தில் பிச்சைக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விஜய் ஆண்டனிக்கு உதவ வருவார்கள். தங்களிடம் உள்ள ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை மருத்துவமனைக்கு அளிப்பார்கள். இதன்மூலம் விதிமுறையை மீறவிருந்த விஜய் ஆண்டனியை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவார்கள். இந்தக் காட்சிக்கும் திரையரங்கில் பலத்த கைத்தட்டல் கிடைத்தது.

மானசீக குருவான எண்ணும் இயக்குநர் மகேந்திரனும் நேரடி குருவான வசந்தும் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். அதுதவிர படத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு பேப்பர் போடும் பையன், நாளிதழின் முதல் பக்கத்தில் படத்தைப் பாராட்டி எழுதித் தந்தான் என நெகிழ்கிறார் சசி.

தமிழில் 2 காட்சி கூட ஓடாது என்று சொல்லப்பட்ட இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சாதனை செய்தது. தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் (பிச்சகாடு) 100 நாள்கள் ஓடி அசத்தியது. ரூ. 50 லட்சம் உரிமைக்கு விற்கப்பட்ட தெலுங்குப் பிச்சைக்காரன், ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. தமிழில் ஹிட், தெலுங்கில் சூப்பர் ஹிட் என்கிற பெயரை எடுத்தது. வெளியான அதே வருடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி, ரேட்டிங்கிலும் சாதனை படைத்தது பிச்சைக்காரன் படம்.

கடைசிக்காட்சியில் இயக்குநர் சசியின் முத்திரை.

இந்தக் காட்சிக்கு முன்பே, இந்தப் படத்தை சசி எடுத்ததற்கான விளக்கம் அவருடைய குரலில் வாய்ஸ்ஓவரில் வெளிப்படும். வழக்கமாக படத்தின் முடிவில் இயக்குநர் பேசினாலே அத்துடன் படம் முடிந்தது என்றுதான் அர்த்தம். ஆனால் இதன்பிறகும் ஓர் அழகான காட்சி படத்தில் தொடர்ந்தது.

48 நாள்கள் வேண்டுதல் முடிந்தபிறகு பல மாதங்கள் கழித்து விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு உடல்நலம் சரியாகிறது. பிறகு, விஜய் ஆண்டனிக்கும் அவருடைய காதலிக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. அம்மா, மனைவியுடன் குடும்பமாகக் கோயிலுக்கு வருவார் விஜய் ஆண்டனி (ஒரே ஷாட்டில் இவை அத்தனையையும் புரியவைத்துவிடுவார்). கோயிலின் வெளியே விஜய் ஆண்டனியிடம் ஒருவர் பிச்சை கேட்பார். அப்போது போனில் பேசிக்கொண்டிருந்ததால் அதை விஜய் ஆண்டனி கவனிக்கமாட்டார். உடனே விஜய் ஆண்டனியின் அம்மா, சாத்னாவிடமிருந்து பணம் வாங்கி தருவார். அவர் சென்றபிறகு மகனிடம் சொல்வார்.

அவரைக் கவனிச்சியா அருளு. நமக்கு நிறைய வேலை இருக்கும்பா. உன்னால முடிஞ்சா கொடு, முடியலைனா இல்லைனு சொல்லி அனுப்பிடு. யாரையும் காக்க வைக்கக்கூடாதுப்பா. ஒரு மனுஷன், இன்னொரு மனுஷன்கிட்ட கையேந்தி பிச்சை கேட்குற வாழ்க்கை இருக்கே… பாவம் அருளு, யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது…

ஒரு பிச்சைக்காரனாக 48 நாள்கள் விஜய் ஆண்டனி வாழ்ந்த வாழ்க்கை அவருடைய அம்மாவுக்கு அதுவரை தெரியாது என்பது இதற்குப் பிறகுதான் சாத்னாவுக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியவரும். அதிர்ச்சியுடன் கணவனைப் பார்ப்பார் சாத்னா. பின்னணியில், நூறு சாமிகள் இருந்தாலும்… பாடல் ஒலிக்கும். இக்காட்சியின் மூலம் இறுதியாக ரசிகர்களை இன்னொருமுறை உணர்ச்சிவசப்படச் செய்வார் சசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்