“தமிழ் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும்.” -அதிசயன்

    

“தமிழ் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழர்கள் தமது விடுதலையையும் வெற்றியையும் பெற வேண்டும். விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களைச் செய்த தமிழ் மக்களுக்காக சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் தமக்கிடையிலான போட்டிகளையும் அரசியல் முரண்பாடுகளையும்  கைவிட்டு, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இது காலத்தின் கட்டளை. மக்களின் எதிர்பார்ப்பும் இதுவே. ஏனென்றால், இன்று தமிழ் அரசியலில் நீங்கள்  இருவருமே சர்வதேசம் அறிந்த ஆளுமைகளாக உள்ளீர்கள். சிங்களத் தரப்பை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உங்கள்  இருவருக்கும் உண்டென்று பலரும் கருதுகிறார்கள். ஆகவே நீங்கள்  இருவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழர்களின் நீண்டகாலக் கனவான விடுதலையையும் எட்டி விடலாம்..” எனப் பலரும் வலியுறுத்தியதை ஏற்று சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைந்துள்ளனர். இந்த ஒன்றிணைவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தமும் ஆலோசனையும் முக்கியமான காரணமாக இருந்துள்ளது. அதைப்போல இந்தியத் தரப்பிலும் இதற்கு மறைமுகத் தூண்டுதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஒன்றிணைவைக் குறித்துப் பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நீடித்து அரசியல் வெற்றியைக் கொடுக்குமாக இருந்தால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும் என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பும் பல ஒன்றிணைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

1970 இன் முற்பகுதியில் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போதும் மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

1980 களின் முற்பகுதியில் விடுதலைப்புலிகள், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு இயக்கங்களும் இணைந்து ஈழதேசிய விடுதலை முன்னணி உருவாகிய போதும் மக்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏறக்குறைய ஈழம் கிடைத்ததைப் போல அன்று பலரும் இந்தக் கூட்டிணைவை உணர்ந்தனர்.

பின்னர் 2000 இல் விடுதலைப்புலிகளின் அனுசரணையோடு ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ரெலோ போன்றவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் பாராளுமன்றத்தில் ஆகக் கூடிய பிரதிநிதித்துவத்தை (22 பாராளுமன்ற உறுப்பினர்களை) ப் பெற்றனர்.

ஆனால், இவையெல்லாம் நாட் செல்லச் செல்ல எந்தப் பெறுமானத்தையும் தராமலே சிதைந்ததே கதையானது. அவ்வாறு இல்லாமல் இந்தப் புதிய கூட்டிணைவானது, அர்த்தபூர்வமாகத் தொடர வேண்டும் எனப் பலரும் விரும்புகின்றனர். “இந்த இணைவு நீடிக்க வேண்டுமாக இருந்தால், தனிப்பட்ட நலன், கட்சி நலன் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்காமல் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.  வரலாற்று அனுபவங்களைச் சரியாகப் படித்துக் கொண்டால் பின்னடைவுகளோ தோல்விகளோ ஏற்படாது” என அரசியல் அவதானிகளும் தமிழ்த்தேசிய அரசியல் விரும்பிகளும் கூறுகின்றனர்.

இதேவேளை இந்தச்சேதியை அறிந்த கொழும்புத் தலைமைகள் அதிர்ச்சியடைந்துள்ளன. தமது பிரித்தாளும் தந்திரத்துக்கு நெருக்கடி வந்துள்ளதாக சிங்களத் தலைமைகள் அச்சமடைந்துள்ளன. சர்வதேச சமூகம் இந்த இணைவைக் குறித்து கூடிய அவதானத்தைச் செலுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள பலருக்கும் இது நம்பமுடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. அதிலும் தமிழரசுக் கட்சியினருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணைவைக் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் அவசர கூட்டத்தை அடுத்தடுத்து நடத்தியுள்ளன. சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகள் எப்போதும் இப்படித்தான். கட்சியின் நலனைப் பற்றியோ  அதனுடைய கட்டுப்பாடு, ஒழுக்க விதிகளைப் பற்றியோ அவர் ஒரு போதுமே கவனத்திற் கொள்வதில்லை என தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன், “கட்சி என்பது மக்களுக்கானதே தவிர, கட்சிக்காக மக்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் கட்சியில் இருப்பதால் பயனில்லை. அது மக்களுடைய நலனையே பாதிக்கும். எனவே இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். சுமந்திரனின் நிலைப்பாட்டை  தமிழரசுக் கட்சியிலுள்ள பலரும் வரவேற்றுள்ளனர். எனினும் இதைக்குறித்த முழுமையான விவரத்தை அறிய முடியவில்லை.

 இதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் இது ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்தச் செய்தியைப் பலரும் முதலில் நம்பவில்லை. ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையென்றால் அவருடன் எப்படிக் கரம் கோர்க்க முடியும்? என்று இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு இன்னும் கஜேந்திரகுமார் தரப்பிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

ஆனால், கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் இணைந்து கரங்கோர்த்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையையும் பார்த்த பின்னும் நம்ப முடியாதிருக்க முடியுமா? ஆனாலும் இதைக்குறித்து தாம் நேரில் பேச வேண்டியுள்ளது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களும் தமிழ்க்காங்கிரஸின் தரப்பினரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கேட்டுள்ளனர்.

தமது கட்சியினரின் ஆச்சரியங்கள், கேள்விகளுக்கு அப்பால் “தமிழ்த்தேசிய புதுமைக் கட்சி” எனப் புதிய கட்சி ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுமந்திரனும் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய புதுமைக்கட்சி, முற்றிலும் புதிய முறையில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கும். அத்துடன் மிகச்சிறந்த வெளியுறவைப் பேணுவதற்கும் தீர்மானித்துள்ளது. வடக்குக் கிழக்கில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது இதில் முதற்பணியாக இருக்கும். அத்துடன், சர்வதேச சமூகம் பொறுப்புச் சொல்லக் கூடிய அடிப்படையிலும் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பொறுப்பளிக்கக் கூடியதாகவும் தமது புதிய அணுகுமுறைகள் அமையும். எமது புதிய அணுகுமுறைகள், தந்திரோபாயங்களினால் இலங்கை அரசும் சிங்கள அதிகார வர்க்கமும் தீர்வை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும் எனவும் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய இணைவைக் குறித்தும் புதிய அறிவிப்புகளைக் குறித்தும் ஊடகத்தரப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. “ஒற்றை ஆட்சிக்குள் தீர்வைக் காண முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சுமந்திரனும் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையைக் கொண்ட கஜேந்திரகுமாரும் எந்த அடிப்படையில் இணைய முடியும்?” என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன், “எந்தக் கொள்கையும் மக்களுக்கானதே. மக்களுடைய விடுதலைக்கு எது தேவையாக இருக்கிறதோ, எது சாத்தியமாக உள்ளதோ அதைப் புரிந்து கொண்டு செயற்படுவதே சரியாக இருக்கும். இதுவே காலத்தின் கட்டளையாகும்” என்றார்.

இதை ஆமோதித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “நாம் ஒற்றையாட்சிக்குள்ளும் தீர்வைக் காணத் தயார். ஒரு நாடு இரு தேசம் என்ற அடிப்படையிலும் தீர்வைக் காணத் தயார். எமது மக்களுக்கு தீர்வு அவசியம். அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதைப்பற்றி எமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அது நாம் எதிர்பார்க்கின்ற தீர்வாக இருக்க வேண்டும். அது மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அதாவது அது உண்மையான விடுதலையாக இருக்க வேண்டும். விடுதலையைப் போலவோ தீர்வைப் போலவோ மாயத் தோற்றம் காட்டுவதாக இருக்கக் கூடாது. அப்படித்தான் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. நம்முடைய வரலாற்றில் சமாதானத் தேவதை பல சந்தர்ப்பங்களில் அழகாக நடனமாடி மக்களை மதி மயங்க வைத்திருக்கிறாள். ஆனால், சமாதானத்தை அந்தத் தேவதையினால் பரிசளிக்க முடியவில்லை. எமது மக்கள் பல தடவைகளிலும் நம்பி ஏமாந்திருக்கின்றனர். ஆனால், இனி அதற்கு வாய்ப்பே இல்லை. இந்தப் பாடங்களையெல்லாம் நாம் தெளிவாகவே படித்திருக்கிறோம். நாம் இன்னும் நிதானமாகவே விசயங்களைக் கையாள விரும்புகிறோம்” என்றார் கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமார் – சுமந்திரன் கூட்டிணைவை அடுத்து இந்தியா, அமெரிக்காக உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் அவசரமாக இருவரையும் அழைத்துப் பேசியுள்ளனர். இது தமக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று கூறுகிறார் சுமந்திரன். இதேவேளை சீனத் தூதுவரையும் சந்தித்துள்ளது இந்தப் புதிய கூட்டு. இலங்கையிலலல் செல்வாக்குச் செலுத்தும் அனைத்துத் தரப்புகளோடும் நல்லுறவைப் பேண வேண்டியது அவசியம். இதைத் தமிழ்த்தேசியப் புதுமைக்கட்சி செய்யும் என்று சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி மிக விரைவில் ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் எனப் புதிய பல நாடுகளுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தாம் “எதை எதிர்பார்த்தோமோ அது இப்பொழுது நடக்க ஆரம்பித்திருக்கிறது. எதிரும் புதிருமாக இருந்தாலும் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு இணைந்து செயற்படும் அரசியல் தலைமைத்துவமே இன்று இலங்கைக்கும் தமிழர்களுக்கும் தேவையாக உள்ளது. உலக அரசியல் ஒழுங்கைப் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு தமிழ் தரப்பு முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது இந்தியா.

“தமிழ் மக்களுக்கு இளைய தலைவர்கள் புதிய அரசியலை முன்னெடுக்க முன்வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்”  என்று தெரிவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இப்படியே பல அமைப்புகளும் நாடுகளும் இந்த ஒருங்கிணைவைக் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.

இதேவேளை தமிழ் மக்களுக்கும் இது புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எப்போதும் உடைந்தும் பிரிந்தும் சென்று கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், உறுப்பினர்களின் மத்தியில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவத்தில் இருந்தோர் தமக்கிடையிலான குரோதங்களையும் போட்டியையும் மறந்து விட்டு மக்களுக்காக ஒன்றிணைந்திருப்பதையிட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய கூட்டிணைவில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்கள்.

1.     இலங்கையினுள்ளே  மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் முன்னெடுப்புகள். இதற்குப் பொறுப்பாக சுமந்திரனும் அவருடைய அணியினரும் இருப்பர். இது இலங்கை அரசுடனும் பிற சிங்களக் கட்சிகளோடும் உறவாடல்களை றே்கொள்ளும். முற்றிலும் புதிய வகையில் இந்த உறவிருக்கும். சிங்களத் தரப்பை குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து, அவர்களைப் பொறுப்புச் சொல்லும் நிலைக்குத் தள்ளுவதே இந்தத் தரப்பின் பிரதான உபாயமாக இருக்கும். அதற்கேற்ற வகையிலான Loby யை இது மேற்கொள்ளும்.

2.     சர்வதேசத் தொடர்புகளை கஜேந்திரகுமார் தலைமையிலான அணி மேற்கொள்ளும். சர்வதேசப் பரப்பிலுள்ள எந்த அணியிலும் புதைந்து விடாத மிதவை அரசியலை மேற்கொள்வதற்கான தந்திரோபாயம் வகுக்கப்பட்டுள்ளது.   அந்த அடிப்படையில் துரிதகதியில் தொடர்பாடல்கள் விருத்தி செய்யப்படும். சர்வதேச ரீதியில் உள்ள பன்மைத்துவ, ஜனநாயக உரிமைகளை மையப்படுத்திய தனித்துவ அரசியலை வலியுறுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3.     தமிழ் மக்களுடைய பொருளாதார மேம்பாடு, பிரதேச அபிவிருத்தி, பண்பாட்டு மேம்பாடு போன்றவற்றுக்கான சிறப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை இணைத்தலையின் மூலம் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் இணைந்து நடைமுறைப்படுத்துவர். இதற்கு உப அணிகள் உருவாக்கப்படும். புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பையும் தமிழகத்தின் உறவையும் இதில் இணைத்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டங்களோடு மேலும் பல வேலைகளை தமிழ்த்தேசியப் புதுமைக் கட்சி முன்னெடுக்கும். முக்கியமாக தமிழ் அரசியல் பரப்பிலுள்ள அனைத்துத் தரப்புகளையும் இதற்குள் உள்வாங்கி, ஓரணியாக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குப் பொறுப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்லது சித்தார்த்தன் அல்லது செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர். அவர்கள் தமிழ்த்தேசிய புதுமைக் கட்சியுடன் இணையும் அடிப்படையில் இதைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்று மேலும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குள் முன்சொல்லப்பட்டவற்றில் 60 வீதமான இலக்கை எட்டுதல். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80 வீத இலக்கைப் பிடித்தல். அடுத்த ஆண்டில் 100 வீதமாக முழுமைப்படுத்துதல். ஆக ஐந்து ஆண்டுகளில் தமிழ்த்தேசியப் புதுமைக் கட்சி தன்னுடைய இலக்கை நிறைவு செய்யும்.

(இது ஒரு மாய யதார்த்தவாதப் புனைவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்