
இலங்கையில் சுயநிர்ணய உரிமை, சமாதானம் மற்றும் நீதி ஆகியவற்றை
அடைந்துகொள்வதற்காகத் தமிழ்மக்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை
தைப்பொங்கல் தினத்தன்று நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள பிரிட்டன்
பாராளுமன்ற உறுப்பினர் கெய்ர் ஸ்டார்மர், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை
உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காண்பிக்காதிருப்பதை
உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு பிரிட்டன் அரசாங்கத்துக்கு இருப்பதாகவும்
வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனிலும், உலகளாவிய ரீதியிலும் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும்
அனைத்துத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது புதிய விளைச்சலைத்தரும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நேரம்
மாத்திரமல்ல. மாறாக ஓர் சமூகம் என்ற ரீதியில் நாமனைவரும் ஒன்றுபடவேண்டிய
நேரமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இத்தருணத்தில் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்கள் நீண்டகாலமாக
பிரிட்டனுக்கு வழங்கிவரும் பங்களிப்பை நான் நினைவுகூருகின்றேன்.
அதேவேளை இலங்கையில் சுயநிர்ணய உரிமை, சமாதானம் மற்றும் நீதி ஆகியவற்றை
அடைந்துகொள்வதற்காகத் தமிழ்மக்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை
நினைவுகூரவேண்டிய தருணமும் இதுவாகும்’ என்றும் கெய்ர் ஸ்டார்மர்
தெரிவித்துள்ளார்.