தமிழ்நாடு – மும்பை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது: மும்பைக்கு 3 புள்ளி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு – மும்பை இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு – மும்பை இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் 7-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கேப்டனுமான ஆதித்யா டரே 157 ரன்கள் விளாசினார். முலானி 87 ரன்களும், அட்டார்டே 58 ரன்களும் அடிக்க மும்பை 488 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், ஆர் அஸ்வின் 3 விக்கெட்டும், டி நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் விளையாடியது. அபிநவ் முகுந்த் 58 ரன்களும், சூர்யபிரகாஷ் 41 ரன்களும், காந்தி 60 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆர் அஸ்வின் 79 ரன்களும், சாய் கிஷோர் 42 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 324 ரன்னில் சுருண்டது. மும்பை அணி சார்பில் முலானி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

164 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் தமிழ்நாடு பாலோ-ஆன் ஆனது. பின்னர் தமிழ்நாடு 2-வது இன்னிங்சை தொடங்கியது. 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவடைந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்சில் மும்பை முன்னிலைப் பெற்றதால் அந்த அணிக்கு 3 புள்ளிகளும், தமிழ்நாடுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

முகநூலில் நாம்